அடுத்த ஆண்டுகூட கொரோனா பாதிப்பு தொடரலாம்.. தமிழக அரசை எச்சரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்.

By Ezhilarasan BabuFirst Published Apr 27, 2021, 11:27 AM IST
Highlights

வெற்றுப் பேச்சுகளும், வீண் பெருமைகளும் மட்டுமே சாதனைகள் என கருதும் பிரதமர் மோடி அவர்களின் தூரநோக்கற்ற அணுகுமுறைகள் இன்று ஸ்டெர்லைட் போன்ற மக்கள் விரோத ஆலைகள் உயிர்பெற வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஸ்டெர்லைட்ஆலைவிவகாரத்தை தமிழகஅரசு கவனமாக அணுக வேண்டும் என மஜகபொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: கொரோனா அபாயங்களை கட்டுப்படுத்த ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க வேண்டிய தேவையில் நாடு உள்ளதால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஓராண்டு கால அனுபவத்தை பயன்படுத்தி, இரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை திட்டங்களை மத்திய மாநில-அரசுகள் செய்யாததே இந்த பேரழிவு ஏற்பட காரணமாகும். வெற்றுப் பேச்சுகளும், வீண் பெருமைகளும் மட்டுமே சாதனைகள் என கருதும் பிரதமர் மோடி அவர்களின் தூரநோக்கற்ற அணுகுமுறைகள் இன்று ஸ்டெர்லைட் போன்ற மக்கள் விரோத ஆலைகள் உயிர்பெற வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு 4 மாத கால அவகாசத்துடன், ஆக்சிஜனை மட்டுமே தயாரிப்பதற்கு, மின்இணைப்பு கொடுப்பதாக விளக்கம் அளித்தாலும், வேதாந்த நிறுவனம் தற்போது கொடுத்து இருக்கும் அறிக்கை சந்தேகங்களை உருவாக்குகிறது. 

அந்த ஆலையின் பேராபத்திற்கு எதிராக மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டக் களமும், அதற்கு 13 போராளிகள் செய்த உயிர்த் தியாகமும் தீயாய் சுடர்விட்டு எரிகின்றன. பாதிக்கப்பட்ட அம்மக்களின் கோபம் தணியவில்லை என்பதை புரிந்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இப்பிரச்சனையை தமிழக அரசு கையாள வேண்டும். அடுத்த ஆண்டும் கூட கொரோனா பாதிப்புகள் தொடரலாம் என்று அஞ்சப்படும் நிலையில், வாழும் உயிர்களை காக்கும் மனிதநேய கடமை அனைவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அணுக வேண்டியிருக்கிறது. 

இந்த முடிவு என்பது வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான போராட்ட அலைகள் நீர்த்துப்போகச் செய்து விடுமோ என்ற அச்சம் இருப்பதை அரசு போக்க வேண்டும். மேலும் தமிழக அரசு நிரந்தர தீர்வாக,  ஸ்டெர்லைட் ஆலையை அரசுடைமையாக்கி, தாமிரம் உற்பத்தியை தவிர்த்து அது போன்ற சூழலியல் கேடு விளைவிக்காத இதர நன்மைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 
 

click me!