
அதிமுக அரசு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எம்எல்ஏக்களை பேரம் பேசும் வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தேகம் எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டப் பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டதாக அக்கட்சியின் எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ அண்மையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டது.
இதையடுத்து அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேலில் சந்தித்து முறையிட்டார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழகத்தில் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசாமல் தங்களின் பிரச்னைகளை பேசுகின்றனர்.
பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டது தொடர்பான வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழிசை குற்றம்சாட்டினார்.
எப்படியாவது இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும், தேர்தல் நடத்தி முதலமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் அவசரப் படுவதாக தமிழிசை தெரிவித்தார்.
பாலாற்றில் தடுப்பனையை ஆந்திர அரசு கட்டினால், அதனை எதிர்த்து தமிழக பாஜக போராட்டம் நடத்தும் எனவும் தமிழிசை கூறினார்.