ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்து சம்பளம் வாங்கியது போதாதா? ஆசிரியரை வறுத்தெடுத்த கலெக்டர் டுவிட்டரில் வருத்தம்

By vinoth kumarFirst Published Sep 10, 2021, 6:32 PM IST
Highlights

மாவட்ட ஆட்சியர் யாரைக் கேட்டு நீங்கள் பள்ளிக்கு விடுமுறை விட்டீர்கள் இது என்ன உங்களது பள்ளிக்கூடமாக? அரசு பள்ளி. கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்து சம்பளம் வாங்கியது போதாதா? நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. 

வரும் காலங்களில் கடும் சொற்கள் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்று தனது செயலுக்கு மன்னிப்பு கோரும் விதமாக கரூர் ஆட்சியர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவர்களின் ஆலோசனைபடி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சுகாதாரத்துறையினர் அந்த பள்ளிக்கு சென்று மற்ற ஆசிரியர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் திடீரென பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரத்திடம் மாவட்ட ஆட்சியர் கேட்டபோது, அவர் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் 18 ஆசிரியர்களில் 6 ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்திருந்தனர். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் யாரைக் கேட்டு நீங்கள் பள்ளிக்கு விடுமுறை விட்டீர்கள் இது என்ன உங்களது பள்ளிக்கூடமாக? அரசு பள்ளி. கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்து சம்பளம் வாங்கியது போதாதா? நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளியை நடத்தி இருக்க வேண்டும் என கண்டித்துள்ளார்.

மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் விடுமுறை விட்ட தலைமையாசிரியர் மற்றும் விடுப்பு எடுத்துக் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாருக்கு, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொரணி அரசு மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் விடுப்பு எடுத்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் காலங்களில் கடும் சொற்கள் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்று தனது செயலுக்கு மன்னிப்பு கோரும்விதமாக பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்த ஆய்வின் போது கொரோனா தடுப்பு எஸ்ஒபி பின்பற்றாமல் விடுமுறை அளித்தது குறித்து மட்டுமே எச்சரிக்கை செய்யப்பட்டது. வரும் காலங்களில் கடும் சொற்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். கரூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார். 

click me!