தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவித்து சென்னையில் போஸ்டரை ஒட்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுக- பாஜக மோதல்
திமுக- பாஜக இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவிப்பதும் சவால் விடுவதும் தொடர்கதையாக உள்ளது. தமிழக அரசின் திட்டங்களில் முறைகேடு நடைபெறுவதாகவும், போலியான நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் தொடர்பாக தமிழக ஆளுநரிடம் பாஜகவினர் புகாரும் கொடுத்திருந்தனர். பதிலுக்கு திமுகவினர் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்பாக அவ்வப்போது சமூக வலை தளத்தில் அவதூறான கருத்துகளை பகிர்வதாக கூறி பாஜகவின் ஐடி பிரிவை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சரை விமர்சித்து போஸ்டர்
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சென்னை நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்துள்ளது. போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர் தொடர்பாக திமுகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. முதலமைச்சரை அவதூறாக சித்தரித்த போஸ்டரை பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் சிவகாசியில் தனியார் அச்சகத்தில் 5,000 போஸ்டர்களை அடித்து கொரியர் மூலம் சென்னை கொண்டு வந்து, வழக்கறிஞர்கள் இருவர் மூலம் சத்தியநாதன் மற்றும் பிலிப்ராஜ் வைத்து சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது விசாரணையில் தெரியவந்தது.
அண்ணாமலை உதவியாளர் கைது
இதுபோன்று முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு கூறிய நபர் யார் என கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் என்பவர் 35 ஆயிரம் கொடுத்து முதலமைச்சரை விமர்சித்தும் கார்ட்டூன் சித்திரம் வெளியிட கூறியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பாஜக நிர்வாகிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
இதையும் படியுங்கள்