இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை.. காவல் துறை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2022, 12:46 PM IST
Highlights

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து தவறாக பேசியதாக திமுக எம்பி ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து தவறாக பேசியதாக திமுக எம்பி ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்துக்கள் குறித்து அவமரியாதை செய்யும் வகையில் ஆ.ராசா பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜேஜே கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோசப் என்பவர் தொடுத்த வழக்கில் காவல்துறை இவ்வாறு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில்,  இந்து மதம் பிராமணரல்லாத இந்துக்களை சூத்திரர்கள் என்று கூறுகிறது, சூத்திரர்கள் என்றால் வேசியின் பிள்ளைகள்  என்று பொருள். எனவே எத்தனை பேர் வேசியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இது பாஜகவினரை கொந்தளிப்படைய செய்தது. இதனை அடுத்து அவர் மீது பாஜகவினர் சார்பில் பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை அதில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜேஜே கட்சியின் நிறுவன தலைவர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ராசாவின் பேச்சு இரு மதத்தினருக்கும் இடையே விரோதத்தை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருந்தது,  ஆ.ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது, தற்போது நடைமுறையில் இல்லாத மனுநூல் குறித்து தேவையின்றி பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக காவல்துறை தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜரானார், அதில் ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளனர் என அவர் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை  அணுகலாம் என அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
 

click me!