
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், அதிமுக, திமுக, தினகரன் ஆகியோரால் பரபரப்பாகும் என நினைத்தால், யாரும் எதிர்பாராத விதமாக விஷால்தான் பரபரப்பாக பேசப்படுகிறார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தவிர தினகரன் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 59 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென நேரடி தேர்தல் அரசியலில் குதித்த விஷால், வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.
ஆனால், அவரை முன்மொழிந்தவர்களில் தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் விஷாலை முன்மொழியவில்லை எனவும் வேட்புமனு படிவத்தில் இருந்த கையொப்பங்கள் அவர்களது இல்லை எனக்கூறி விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்த விஷால், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டார். எனினும் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு தன் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து அறிவிக்கப்போவதாகவும் விஷால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட தாங்கள் முன்மொழியவில்லை என தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம் நேரில் அளித்த வாக்குமூல வீடியோ வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில், விஷாலை முன்மொழிந்து நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல என தீபன் தெரிவித்திருக்கிறார். விஷாலை முன்மொழியவில்லை என்றால், நான் கையெழுத்து போடவில்லை என்றுதான் கூறியிருக்க வேண்டும். ஆனால், நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல என தீபன் தெரிவித்திருக்கிறார்.
அந்த வீடியோ பதிவை வெளியிட்டு, இதைவிட ஜனநாயக கேலிக்கூத்து எங்காவது நடந்ததுண்டா? என விஷால் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள் என விஷால் கூறும் குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில், அந்த வாக்குமூலம் அமைந்துள்ளது.