
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு பொது மக்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி கிராம தலைவர்கள் காவி வர்ணம் பூசி வருவது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
முக்கியமாக இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதில் அதிக அக்கறையுடன் செய்லபட்டு வருகிறார். இதனால் தொடக்கத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு இருந்த செல்வாக்கு சரிந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பதவி ஏற்றதில் இருந்து, அங்குள்ள அரசு கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில், பிலிபட் மாவட்டத்தில் உள்ள 100 தொடக்கப்பள்ளிகளுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
பொது மக்களும் ஆசிரியர்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும்,. போராட்டங்கள் நடத்தியும் அங்குள்ள கிராமத் தலைவர்கள் வலுக்கட்டாயமாக பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.