
ஆற்காடு வீராசாமி ஆளுங்கிறதாலே வாய மூடிக்கிட்டு இருக்கோம், இல்லேன்னா!: அரசு அதிகாரியை மிரட்டும் தி.மு.க. மாவட்ட செயலாளர்!
மக்கள் நல விஷயங்களை கிடப்பில் போட்டுவிட்டு ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக அ.தி.மு.க. அரசு செயல்படுவதாக தொடர் விமர்சனங்கள் எழுவதால் தமிழகமெங்கும் அக்கட்சிக்கு எதிராக மிக மோசமான எதிர்ப்பலை எழுந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். கேட்பதற்கு ஆளில்லை என்பதால் தமிழகமெங்கும் ஆளுங்கட்சியினர் பண வசூல் விவகாரத்தில் புகுந்து விளையாடுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் வெடிக்கின்றன.
இதனால் அடுத்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு தி.மு.க.வுக்குதான்! அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அராஜகங்கள் குறைந்து, மக்கள் நலப் பணிகள் வேகமெடுக்கும் எனவும் மக்கள் நம்புவதாக கூறப்படும் நிலையில், தி.மு.க. மீதான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் வகையில் ஒரு விஷயம் வாட்ஸ் ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறடு இன்று.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன், தென்காசி நகராட்சி கமிஷனரிடம் பணம் கேட்டு சவுண்டு விடும் அட்ராசிட்டி ஆடியோ என்கிற தலைப்புடன் ஒரு ஆடியோ பதிவு பட்டையை கிளப்புகிறது. தங்களின் வசூலுக்காக பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறிய கமிஷனரிடம், ”பத்து ரூபாய்னா (பத்தாயிரம் ரூபாய்) நீங்க கொடுக்கவே வேணாம். என்னென்ன ஒர்க்கு வந்திருக்கு, நீங்க என்னென்ன பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு உங்க மேல ஆயிரத்தெட்டு புகார்கள் சொல்றாங்க மக்கள். ஆனா நீங்க ஆற்காட்டாருக்கு வேண்டப்பட்ட ஆளுன்னு சிலர் சொன்னதால வாய மூடிக்கிட்டு இருக்கோம்.
ஒரு அம்பது ரூபாய்க்கு (ஐம்பதாயிரம் ரூபாய்) குறைவில்லாம கொடுத்துவிடுறதா இருந்தா கொடுங்க.” என்கிறார்.
உடனே கமிஷனர் ‘எனக்கு அவ்வளவு வசதி கிடையாது. நான் எவ்வளவு ஸ்டிரெய்ட் ஃபார்வடான அதிகாரின்னு கேட்டு பாருங்க!’ என்றதும் சிவபத்மநாபன், ”நீங்க எவ்வளவு நேர்மையான ஆளுன்னு எனக்கு தெரியும். ஒவ்வொரு பில்டிங் வாரியா நீங்கள் எவ்வளவு பணம் வாங்கியிருக்கீங்கன்னு எங்கிட்ட பட்டியலிருக்குது. ரசீதே போடாம நீங்க எவ்வளவு வாங்குறீகன்னு லிஸ்டு வெச்சிருக்கேன்.” என்று மிரட்டுகிறார்.
உடனே கமிஷனர் ‘நான் ரசீது போடாம எதையும் வசூல் பண்றதில்லை ‘ என்றதும், “நீங்க என்னென்ன பண்றீகன்னு எல்லாம் எங்களுக்கு தெரியும். ரொம்ப பேச வேண்டாம். 50 ரூவா (ஐம்பதாயிரம்) கொடுத்துவிடுறதா இருந்தா கொடுத்துவிடுங்க. இல்லேன்னா வேண்டாம்.” என்கிறார்.
பிறகு கமிஷனர் பத்தாயிரத்தோடு பத்தாயிரம் சேர்த்து இருபதாயிரமாய் தருகிறேன் என்று சொல்ல, ‘ஐம்பதாயிரம் கொடுத்துவிடுறதா இருந்தா கொடுங்க. இல்லேன்னா வேண்டாம்.” என்று விடாப்பிடியாய் நிற்கிறார் மாவட்ட செயலாளர்.
நொந்து போன அதிகாரி “ அப்போ நீங்க என்ன பண்ணணுமோ பண்ணிக்குங்க.” என்கிறார்.
ஸ்டாலினின் விசிட் ஒட்டிய செலவுகளுக்காக மாவட்ட செயலாளர் இப்படி அடாவடி வசூல் செய்தபோது நடந்த சம்பவம் இது என்கிறார்கள். கமிஷனர் தரப்பேதான் இந்த ஆடியோவை வெளியே உலவ விட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
ஆட்சிக்கு வர தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்கும்போதே இவ்வளவு அட்ராசிட்டி என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால்? என்று இப்போது தி.மு.க.வை விமர்சிக்க துவங்கியிருக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.