அரசியல் லாபத்திற்காக தென் தமிழகத்தில் மீண்டும் ஒரு சாதிய கலவரத்தை தூண்ட சதி... கிருஷ்ணசாமி பகீர்

By vinoth kumar  |  First Published Aug 17, 2023, 11:13 AM IST

கூலிப்படையைக் கொண்டு சாதிய வன்மத்தோடு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த எவரையாவது கொலை செய்ய வேண்டும்; அதன் மூலமாக பதிலடிகள் நடந்து தென் தென் தமிழகத்தில் அது ஒரு தொடர் நிகழ்வாகி கலவரங்கள் ஏற்பட வேண்டும் என்ற ஒரு திட்டமிட்ட தீய செயலின் தொடக்கமாகவே இக்கொலைச் செயலை பார்க்க வேண்டி உள்ளது. 


2024 நாடாளுமன்றத் தேர்தலை கணக்கிலே கொண்டு தென்தமிழகத்தில் ஒரு சாதிய மோதலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேட ஒரு மிகப்பெரிய சதி வலை பின்னப்படுவதாக கிருஷ்ணசாமி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தைச் சார்ந்த 30 வயது நிரம்பிய பட்டதாரி ஆசிரியரும், அந்த கிராமத்தின் வார்டு உறுப்பினரும், திமுக கிளை பொறுப்பாளருமான தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 3 மணி அளவில் அவருடைய சொந்த கிராமத்திலிருந்து 1/2 கி.மீட்டர் தூரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பெற்றோர்களும், கிராமத்தைச் சார்ந்தவர்களும் அவருடைய கொலைக்குப் பின்புலமாக இருந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி கடந்த மூன்று தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய 77வது சுதந்திர தினமான இன்றும் தமிழகத்தில் முகாரி ராகம் பாடும் நிலையே உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அதிமுக எழுச்சி மாநாட்டுக்கு தடையா? வந்தது புதிய சிக்கல்.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

தீர விசாரித்ததில் அவருக்கு எவ்விதமான முன் விரோதமோ, பகையோ எவரிடத்திலும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. அக்கொலையை செய்ததாக அதே கிராமத்தைச் சார்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள். தனிப்பட்ட கொடுக்கல் - வாங்கல் அல்லது நிலத்தகராறு அல்லது வேறு எந்த விதத்திலும் கொலையுண்டவருக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் எவ்வித பகையும் இல்லாமல் இருந்தும், கூலிப்படையைக் கொண்டு சாதிய வன்மத்தோடு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த எவரையாவது கொலை செய்ய வேண்டும்; அதன் மூலமாக பதிலடிகள் நடந்து தென் தென் தமிழகத்தில் அது ஒரு தொடர் நிகழ்வாகி கலவரங்கள் ஏற்பட வேண்டும் என்ற ஒரு திட்டமிட்ட தீய செயலின் தொடக்கமாகவே இக்கொலைச் செயலை பார்க்க வேண்டி உள்ளது. 

1992-ல் தொடங்கி, 30 ஆண்டு காலமாக நிகழ்ந்து வந்த தென் தமிழக சாதிய கலவரங்கள் நாம் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மெல்ல மெல்லக் குறைந்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் உருவாகி வருகிறது. தென் தமிழகத்தில் அமைதி திரும்பி வருகின்ற காரணத்தினால் பிற மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகு அளவிற்கு குறைந்து, அவரவர் பகுதியிலேயே ஏதாவது தொழில் செய்து, வருமானம் ஈட்டி குடும்பத்தை நிம்மதியாக நடத்திடும் சூழல் உருவாகி உள்ளது.

குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர், நாடார், மறவர், யாதவர் சமுதாயங்களுக்கு இடையே இருந்த மோதல்கள் வெகுவாக குறைந்து அவர்களிடத்தில் ஓர் நல்லிணக்கம் ஏற்படுவதை தி-ஸ்டாக்கிஸ்டுகளும், அவர்களது ஏவல் சக்திகளும் விரும்பவில்லை.  அமைதியான சுழலைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் எவ்விதத்திலாவது தமிழகத்தில் மீண்டும் சாதிய கலவரத்தைத் தூண்டி அதில் குளிர் காயலாமா? பிரதான சமுதாயங்களைப் பிரித்து வைத்து, தாங்கள் மட்டும் சாதிக்கு அப்பாற்பட்டவர்களைப் போல் காண்பித்து; ஏமாற்றி வாக்குகளைப் பறித்துக் கொள்ளலாமா? என்ற தீய எண்ணத்திலேயே ஆட்சிக்கு வந்த இந்த இரண்டரை வருடத்தில் குறிப்பாக கடந்த ஆறு மாதத்தில் மட்டும் அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க;-  ஃபயாஸ்தீன் பேச்சை கவனிச்சீங்களா? திமுகவின் கல்லூரி வசூல் வேட்டையை விளாசும் அண்ணாமலை!

சாதிய ரீதியாக 15க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. திசையன் விளை அருகே முத்தையா என்ற பள்ளி மாணவன் கொலையுண்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை மூடி மறைத்து, அதே சமுதாயத்தினரையே குற்றவாளிகளாக்கி விட்டார்கள்; முக்கூடல் அருகே பள்ளக்கால் பகுதியில் சகமாணவன் ஒருவன் கல்லாலேயே அடித்து கொலை செய்யப்பட்டான்; கடந்த 5 தினங்களுக்கு முன்பு, நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சின்னதுரை சக பள்ளி சக வகுப்பு மாணவர்களாலேயே வீடு புகுந்து வெட்டப்பட்டு, அப்பள்ளி மாணவனும், அவனது சகோதரியும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்; அச்சம்பவத்தை தடுக்க வந்த அவரது தாத்தா கிருஷ்ணன் அதே இடத்தில் மரணமெய்தியுள்ளார். 

இந்நிலையில் நேற்றைய முன்தினம் கீழநத்தம் ராஜாமணி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு சோளக் கொல்லையிலேயே ஒரு தட்டையை வெட்டிப்போட்டதைப் போல இந்த கொடூரச் சம்பவத்தைச் சிறிதும் மனசாட்சி இன்றி சித்தரிக்க காவல்துறையினர் முயற்சி செய்கிறார்கள். தனது கட்சியின் தொண்டர் கொலையுண்ட பிறகும் அந்த மாவட்ட மூன்று மாவட்டத்தில் மட்டும் 4 அமைச்சர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர் கூட ராஜாமணியின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறவோ, இச்சம்பவத்தைக் கண்டிக்கவோ முன்வரவில்லை. எளிய சமுதாய மக்களையும், இளைஞர்களையும் தேர்தல் நேரத்தில் கொடி கட்டுவதற்கும், கோஷம் போடுவதற்கும் கொடுத்த பணத்தை வீதி வீதியாகச் சென்று வழங்குவதற்கும் மட்டும் பயன்படுத்துவார்களே தவிர, இறந்த பிறகும் கூட மதிப்பளிக்க கூடியவர்களாக இருந்துவிடக் கூடாது என்பதில் தி-ஸ்ட்டாக்கிஸ்ட் கட்சியினர் குறியாக இருக்கிறார்கள். ராஜாமணியை மட்டுமல்ல, நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவன் சின்னதுரையையும் அவர் வீட்டுக்குச் சென்று கூட பார்க்கவில்லை.

ஆனால்,  நீட் தேர்வைக் குறை கூறி இறந்தவுடன் தி-ஸ்டாக்கிஸ்ட் குடும்பமே இறந்து போன ஜெகதீஸ்வரனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ஓடோடி போகிறார்கள்; ஓட்டு, அரசியல் லாபம் என்றால் எவர் காலிலும் விழுவதற்கும் கூசமாட்டார்கள். அவர்கள் பேசக்கூடிய சமூக நீதியைத் திரைப்படத்தில்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, எதார்த்தத்தில் காண இயலாது. அவர்களின் வஞ்சக நெஞ்சங்களைப் புரிந்து கொள்ளாமல் தேவேந்திர குல வேளாளர் சமுதாய பெரியோர்களும், இளைஞர்களும்; மற்ற தமிழ் சமுதாய பெரியோர்களும் அவர்களின் வஞ்சக வலையில் விட்டில் பூச்சிகளைப் போல வீழ்ந்து வீணாகிறார்களே என்ற ஆதங்கம் உண்டாகிறது. 
தீ வைக்கக் கூடியவர்கள் தலையிலும் தீ வைக்கிறார்கள்; மலையிலேயும் தீ வைக்கிறார்கள்; கொல்லையிலும் தீ வைக்கிறார்கள். என்ன செய்வது இந்த சமுதாயத்தில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தை நெஞ்சில் தாங்கி செயல்படுவதால் தமிழகத்தின் எந்தப் பகுதியில் சாதிய மற்றும் மதத்தீ பற்றினாலும் அதை அணைக்க வேண்டிய பொறுப்பு புதிய தமிழகம் கட்சிக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் கீழநத்தம் இராஜமணி படுகொலையைச் சுட்டிக் காட்டுகிறோம்; குரல் கொடுக்கிறோம்; காரணிகளைக் கண்டறிய வலியுறுத்துகிறோம்.

இதையும் படிங்க;-   அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையே போச்சு! ஓட்டேரி காவலரின் கதறல் நெஞ்சை உறைய வைக்கிறது! டிடிவி.தினகரன்.!

2024 நாடாளுமன்றத் தேர்தலை கணக்கிலே கொண்டு தென்தமிழகத்தில் ஒரு சாதிய மோதலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேட ஒரு மிகப்பெரிய சதி வலை பின்னப்படுவதாகவும், அதற்காகவே முகவரியற்ற சில சமூக விரோத கும்பல்களை விலைபேசி அவர்கள் மூலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆத்திரமூட்டக்கூடிய வகையில் பேசியும், எழுதியும் சாதிய மோதல்களைக் கூர்மைப்படுத்தவும்; 10 வருடங்களுக்கு முன்பு, இதே பாளையங்கோட்டை பகுதியில் அப்பாவி பால்காரர்களை திடீர் திடீரென கொன்று ரத்த தாகம் தீர்த்துக் கொண்டதைப் போலவே, பாளையங்கோட்டை கீழநத்தத்தில் நடந்த ராஜாமணி கொலை இப்பொழுதும் அதேபோன்று ஒரு மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டுவதற்குண்டான முன்னோடியாகவே அரங்கேற்றப்படுகின்றன எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன.

தமிழ் சமுதாயங்களான நாம் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள தென் தமிழக அமைதியைச் சீர்குலைக்க நாம் அனுமதித்து விடக்கூடாது. கடந்த 50 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல தமிழ் சமுதாயம் இன்று இல்லை. ஒருவரது வழியில் இன்னொருவர் குறிப்பிடாமல் மேல் நோக்கி வளர்வதற்கு மட்டுமே அனைவரது எண்ணங்களும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். உழைக்கும் மக்களை மோத விட்டுக் குளிர் காய்வதற்கும் அரசியல் லாபம் தேடுவதற்கும் யாரும் இரையாகி விடக்கூடாது. ஒற்றுமையும் நல்லிணக்கமும் மட்டுமே அனைவருக்கும் அமைதியையும் வளர்ச்சியையும் தரும் என்பதை தாரக மந்திரமாக கருதி, உயர்ந்தவர் – தாழ்ந்தவர், வசதியானவர் – ஏழ்மையானவர், படித்தவர் - படிக்காதவர் என்ற அனைத்து பேதங்களையும் நீக்கி ஒருமைப்பாட்டுடன் செயல்படவும்; இன்றைய ஆட்சியாளர்களின் கெட்ட நோக்கங்கள் புதிய புதிய வடிவத்தில் எப்படி வந்தாலும் அதை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கீழநத்தத்தில் எவ்வித பகையும் முன்விரோதமும் இல்லாமல் வெறுமனே சாலையோர பாலத்தில் அமர்ந்து கொண்டிருந்த ராஜாமணி என்ற பட்டதாரி இளைஞனைக் கொலை செய்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. காவல்துறை வழக்கம்போல எல்லாவற்றையும் மூடி மறைப்பது போல இச்சம்பவத்தையும் மூடி மறைக்க எண்ணாமல் இதனுடைய உண்மைத் தன்மையை வெளிக் வெளிக்கொணர்ந்து சாதியக் கலவரம் தென் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கக்கூடிய வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கவும் இக்கொலையால் பயன்பெற்ற பயனாளி யார் என்பதை அடையாளம் கண்டு நீதியை நிலைநாட்டவும் வலியுறுத்துகிறேன். காவல்துறை அதிகாரிகள் தாங்கள் சுதந்திரமாகச் செயல்படவும்; உண்மையாகவும் நியாயமாகவும் செயல்படக் கடமைப் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து எவ்விதமான அரசியல் அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் தென் தமிழகத்தில் இதுவே இறுதி சம்பவமாக இருக்கக்கூடிய வகையில் காவல்துறையின் சட்டப் பூர்வ நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

click me!