திமுக வெற்றியைத் தடுக்க சதி.. அவர்களது எண்ணம் ஈடேறக்கூடாது.. அலறும் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Mar 27, 2021, 5:27 PM IST
Highlights

தேர்தல் பரப்புரையில் ஈடுபடும்போது கண்ணியக்குறைவான சொற்களை வெளிப்படுத்தக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபடும்போது கண்ணியக்குறைவான சொற்களை வெளிப்படுத்தக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக முன்னாள் அமைச்சர் ராசா, ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று பேசினார். ராசாவின் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவரது பேச்சு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபடும்போது கண்ணியக்குறைவான சொற்களை வெளிப்படுத்தக்கூடாது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அன்புடைய கழக உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும். தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

click me!