தரம் தாழும் தமிழக அரசியல். இதுதான் பகுத்தறிவு பாசறையில் பயின்றதா?ஆ. ராசாவின் பேச்சால் குமுறும் தங்கர் பச்சான்

By Ezhilarasan BabuFirst Published Mar 27, 2021, 4:44 PM IST
Highlights

எப்படியாவது வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இன்றைய அரசியல்வாதிகள் பேசும் பேச்சுக்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
  

எப்படியாவது வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இன்றைய அரசியல்வாதிகள் பேசும் பேச்சுக்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.என இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எடப்பாடி பழனிச்சாமியை இழிவாக விமர்சித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு பதிவு செய்துள்ளார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து 26-3-2021 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசிய அவர், ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து முதல்வர் வேட்பாளராகவும், நாளைய முதல்வராகவும் வர உள்ளார். அவர் முறையாக பிறந்தவர் என்றும், செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தவர், எனவே அவர் கள்ள உறவில் பிறந்தவர் என்றும் விமர்சித்தார். 

இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரை இதுபோன்ற எடுத்துக்காட்டுடன் ராசா பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராசாவுக்கு எதிராக இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்று வெளயிட்டுள்ளார். அதில், 

எப்படியாவது வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இன்றைய அரசியல்வாதிகள் பேசும் பேச்சுக்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் தாய் மீது முந்நாள் நடுவண் அமைச்சர் ஆ. ராசா அவர்கள் வீசியுள்ள பழிச்சொல்லை திமுகவில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! 

சொல்வதற்கே வாய் கூசும் அவரது தொடர்ச்சியான தரம் தாழ்ந்த பேச்சுக்கள் போல் மற்றவர்களும் பேசத் தொடங்கிவிட்டால் அதையும் இந்த மக்கள் கேட்டுக்கொண்டுதான் வாழ வேண்டுமா? தலைமையில் உள்ளவர்கள் அவரது பேச்சினை கண்டிக்காததும், ஊடகங்கள் அது குறித்துப்பேச மறுப்பதும் தமிழக அரசியல் முழு கொள்ளை வணிகமாக மாறிப்போனதையே பறைசாற்றுகின்றன. இப்படியே போனால் பகுத்தறிவுப் பாசறையில்  பாடம் பயின்றதாக கூறிக்கொண்டு பெருந்தலைவர்களின் படங்களை இனி பயன்படுத்துவதில் எவ்வித நியாயமும் இருக்காது என திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.   

click me!