அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்த மண்ணின் மதமான இந்து மத கலாசாரத்தை, அடையாளங்களை அழித்து ஒழிக்க, இங்கு பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சி தான் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சு.
தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை. பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க ராஜராஜ சோழன் போன்ற மன்னர்களின் வரலாற்றை நாம் ஒவ்வொருவரிடம் கொண்டு செல்ல உறுதி ஏற்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில்;- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், "திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கிறது" என்று வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சை மண்ணில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். அவருக்கு, 'சிவபாத சேகரன்', 'சோழ நாராயணன்', 'திருமுறை கண்ட சோழன்', 'உலகளந்தான்' என்று பல பெயர்கள் உண்டு. தஞ்சை பெருவுடையார் கோயிலில் ராஜராஜ சோழன் கட்டிய விநாயகர் கோயில் உள்ளது. சோழர் கால கல்வெட்டுகளில் 'நாராயணன்' என்ற பெயர் அதிகமாக காணக் கிடைக்கிறது. இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து, கம்போடியா என்று உலகின் பல நாடுகளில், சிவலிங்க வழிபாடு வருவதற்கு சோழ அரசர்களே காரணம். சோழ மன்னர்கள் அரசாண்ட இடங்களில் எல்லாம், சிவபெருமானுக்கு மிகப்பெரும் ஆலயத்தை அமைத்தார்கள். கம்போடியாவிலுள்ள இந்து ஆலயம் தான் உலகத்திலேயே மிகப்பெரிய இந்து ஆலயம்.
சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தொன்மையான தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும், இந்து வழிபாடு பற்றியும் சிவன், பிரம்மா, விஷ்ணு என்று இந்து கடவுள்கள் பற்றியும் விரிவாகவே பேசப்பட்டுள்ளன. மிக முக்கியமான தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில், "பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே" என்று 'நாராயணா" என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தமிழ் நிலம் என்பது ஆன்மிக பூமி. இந்து பூமி. அந்நிய படையெடுப்பாளர்களால் இங்கு அந்நிய மதங்களும் வந்துள்ளன. பரந்த மனப்பான்மை கொண்ட இந்துக்கள் அவற்றையும் அனுமதித்தனர். சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களும், விஜயநகர பேரரசர்களும், நாயக்க மன்னர்களும் கட்டிய 30,000 அதிகமான கோயில்கள், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தமிழகத்தில் சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன. ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தமிழர்களின் அடையாளமாக நிற்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் அங்கிருந்த பூர்வகுடி மக்களையும், பூர்வகுடி மதங்களையும், வழிபாட்டு முறைகளையும் அழித்துவிட்டு, சில நிறுவன மதங்களை நிலை நிறுத்தினார்கள். அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிறுவன மதங்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது. முகலாயர்கள் காலத்தில் இஸ்லாமிய மதமாற்றமும், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் இங்கு அதிகமாக நிகழ்ந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகும் மத மாற்றங்கள் நிற்கவில்லை. அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்த மண்ணின் மதமான இந்து மத கலாசாரத்தை, அடையாளங்களை அழித்து ஒழிக்க, இங்கு பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சி தான் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சு. ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து அல்ல என்று சொல்லவும் இப்போது துணிந்திருக்கிறார்கள்.
இது கண்டனத்திற்குரியது. இது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை. பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க, ராஜராஜ சோழன் போன்ற சோழ, சேர, பல்லவ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றை நாம் ஒவ்வொருவரிடம் கொண்டு செல்ல உறுதி ஏற்போம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.