இளைஞர்களுடன் கனெக்ட் ஆகனும்..! உதயநிதியை தேடி வந்த புதிய பதவி! பின்னனி என்ன?

By Selva KathirFirst Published Sep 14, 2021, 11:28 AM IST
Highlights

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனம் என்றால் அது அண்ணா பல்கலைக்கழகம் தான். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. தனியார், அரசு என தன்னாட்சி அதிகாரம் இல்லாத அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளிலும் பிஇ முதல் எம்இ, பிடெக், எம்டெக் என அனைத்து வகையான மாணவர் சேர்க்கையும் அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாகவே நடைபெறும். 

அமைச்சர் பதவியே காத்திருக்கும் போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனம் என்றால் அது அண்ணா பல்கலைக்கழகம் தான். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. தனியார், அரசு என தன்னாட்சி அதிகாரம் இல்லாத அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளிலும் பிஇ முதல் எம்இ, பிடெக், எம்டெக் என அனைத்து வகையான மாணவர் சேர்க்கையும் அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாகவே நடைபெறும். தற்போதைய சூழலில் சுமார் 550 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் நேரடியாக சுமார் 18ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் எப்படியும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இத்தகைய மிகப்பெரிய கல்வி நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய போது வேந்தராக ஆளுநரும், துணை வேந்தர் நியமனம் என்றும் சட்டம் இயற்றப்பட்டது.

இது தவிர அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஆட்சி மன்ற குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினர்களை தேர்வு செய்பவர்கள் எம்எல்ஏக்களே ஆகும். அதாவது உதயநிதி தற்போது ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு எதிராக வேறு யாரேனும் போட்டியிட முன்வந்தால் எம்எல்ஏக்களில் பெரும்பான்மை கோரப்படும். ஆனால் சட்டப்பேரவையில் தற்போது திமுக தனிப்பெரும்பான்மையுடன் உள்ளதால் உதயநிதி இந்த பதவிக்கு நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை நேரடியாக துணைவேந்தர் நியமித்தாலும் அவர் வேந்தரான ஆளுநருக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். இதே போல் தேர்வு, தேர்வு கட்டணம், புதிய பாடத்திட்டம், புதிய பாடப்பிரிவு உள்ளிட்ட அனைத்து முக்கியமான விஷயங்களுக்கும் ஆட்சி மன்ற குழுவின் ஒப்புதலை துணைவேந்தர் பெற வேண்டியது கட்டாயம். தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே உயர் கல்வியை காவிமயமாக்க முயற்சிகள் நடைபெறுவதாக புகார் உண்டு. கடந்த முறை ஆளுநராக இருந்த பன்வாரிலால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமித்தார்.

இப்படி மத்திய அரசு நேரடியாக கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த முயலும் நிலையில் அதனை தடுத்து எதிர்கொள்ள உதயநிதி களம் இறக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களுக்கு என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரத்யேக அதிகாரங்கள் உண்டு. அதனை எல்லாம் பயன்படுத்தி ஏழை மாணவர்களுக்கு உதவ இயலும் என்கிறார்கள். மேலும் அவ்வப்போது பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தவும் ஆட்சி மன்ற குழு உறுப்பினருக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதியில் செல்லப்பிள்ளை என்று பெயர் எடுத்தது போல் சுமார் 10 லட்சம் மாணவர்களை கொண்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும தனது அதிரடி செயல்பாடுகள் மூலம் இளைஞர்களுடன் நேரடியாக கனெக்ட் ஆகும் வாய்ப்பு உதயநிதிக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமா மூலம் மாநிலம் முழுவதும் பிரபலமான உதயநிதியை திமுக இளைஞர் அணிச் செயலாளராக்கி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கினார்கள். தற்போது அண்ணா பல்கலைக்கழக பதவி மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

click me!