
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மான்ட்சார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 வது நாளாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் தங்களது விளை பொருட்களை சாலைகளின் மத்தியில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் திடீர் வன்முறை ஏற்பட்டது.
இதனால் மான்ட்சார் மாவட்டத்திலும் அதை சுற்றியுள்ள ஊர்களிலும் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வன்முறை பரவுவதை தடுக்க போலீஸ் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி நேற்று மதியம் மத்திய பிரதேசம் சென்றார். மத்திய பிரதேச எல்லைக்குள் செல்ல முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ராகுல் காந்தியின் கைது நடவடிக்கையை எதிர்த்து புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.