
பெங்களுரு ஜெய நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி சுமார் ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மே 12ஆம் தேதியன்று, கர்நாடக மாநிலத்திலுள்ள 222 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜெயநகர் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. இங்கு, மே 28ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டது.
ஜெயநகர் தொகுதியில், கடந்த மே 4ஆம் தேதியன்று தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்த பாஜக வேட்பாளர் விஜயகுமார், பெங்களூருவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மாரடைப்பினால் இறந்துவிட்டார். இதனால், அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தது தேர்தல் ஆணையம். ஜூன் 11ஆம் தேதியன்று அங்கு தேர்தல் நடைபெறுமெனவும் அறிவித்தது.
இந்நிலையில், விஜயகுமாரின் தம்பி பி.என்.பிரகலாத்தை, இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்தது பாஜக தலைமை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியானது தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் சவும்யா ரெட்டி போட்டியிட்டார். நேற்று முன்தினம் ஜெயநகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 55 சதவீத வாக்குகள் இங்கு பதிவானது. இத்தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி, பெங்களூருவில் இன்று நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவும்யா ரெட்டி 54,457 வாக்குகளும், பிரகலாத் 51,568 வாக்குகளும் பெற்றனர். மே 12 ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் 78 இடங்களைப் பெற்றது காங்கிரஸ் கட்சி. ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் முனிரத்னா மற்றும் ஜெயநகர் தொகுதியில் சவும்யா ரெட்டி பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.