
தலைமை செயலாளரின் உறவினர் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல், அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த எஸ்.விசேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தெரிவித்த விமர்சனம் கடும் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது. பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவான விமர்சன செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் இன்று எஸ்.வி.சேகர். பிரச்சனையை எழுப்பினார். எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால், எஸ்.வி.சேகர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. எனவே அது குறித்து இங்கு பேச முடியாது என்று கூறினா.
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியாக பேச முயன்றார். ஆனால், சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. நீதிமன்றம் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினேன். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர், மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எஸ்.வி.சேகர் தரக்குறைவான தரங்கெட்ட வகையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். அதனை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் எல்லாம் மாநகர காவல் துறையை சந்தித்து கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி புகார் கொடுத்திருந்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல் துறை ஈடுபட்டிருக்கிறது. ஆனால், அதை எதிர்த்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்க்ல செய்தார். ஆனால், எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் தலைமை செயலாளருடைய உறவினராக இருக்கக் கூடிய எஸ்.வி.சேகரை கைது செய்ய இந்த அரசு தங்குகிறது. எஸ்.வி.சேகரை சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறது.
எஸ்.வி.சேகர், தாராளமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். மத்திய அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். அண்மையில், சென்னை அண்ணா நகர் பகுதியில் சின்னத்திரை சம்பந்தமாக நடந்த தேர்தலில் எஸ்.வி.சேகர் நடிகர் என்ற முறையில் கலந்து கொண்டு வாக்களித்தார்.
அங்கு காவல் துறை அதிகாரிகள், உயரதிகாரிகள் இருந்தனர். போலீஸ் பாதுகாப்போடு எஸ்.வி.சேகர் ஓட்டு போட்டு விட்டு போயிருக்கிறார். தலைமை செயலாளரின் உறவினராக இருக்கக்கூடிய அவரை கைது செய்யாமல் அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பிய நேரத்தில் சபாநாயகர் அனுமதி தரவில்லை. தொடர்ந்து முயற்சித்தேன் மறுத்து விட்டார். இதைக் கண்டிக்கின்ற வகையில், வெளிநடப்பு செய்ததாக மு.க.ஸ்டாலின் கூறினார்.