ஜிவ்வென உயரும் காங்கிரஸ் கிராஃப் !! ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? அதிரடி கருத்துக் கணிப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 10, 2018, 12:40 PM IST
Highlights

பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும்  மிசோரம் மற்றும் சட்டீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் இழுபறி நீடிக்கும் என்றும் சி- ஓட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

நவம்பர் 12 ஆம் தேதி முதல் டிசம்பர்  7 ஆம் தேதி வரை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் மற்றும் சட்டீஸ்கர்  ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 11 ஆம் தேதியன்று இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும், சி- ஓட்டர்ஸ் என்ற நிறுவனம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை அறிவித்துள்ளது.

அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் வசுந்துரா ராஜேவுக்கு எதிரான அலை வீசுவதாகவும், அங்குள்ள 200 தொகுதிகளில் 145  தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்றும் பாஜகவுக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தைக் பொறுத்தவரை 15 ஆண்டுகளுக்குப் பின் அங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறது. 116 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பாஜக 107 தொகுதிகளை மட்டுமே பிடிக்கும் என்றும் சி- ஓட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 94 தொகுதிகளிலும், தெலுங்குதேசம் 14 தொகுதிகளிலும், தெலங்கானா ஜன சமித்ரி கட்சி 8 இடங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 3 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் - தெலுங்குதேசம் கட்சி கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிய வ்ந்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு மிசோரம் தேசிய கட்சிக்கு 17 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 12 தொகுதிகளும், மிசோ மக்கள் கட்சிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் 42. 2 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் கட்சி 41 இடங்களையும், பாஜக 43 இடங்களையும் பெறும் என தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களைப் பொறுத்தவரை கடும் இழுபறியே நிலவுகிறது.

click me!