அடம்பிடித்த கலாநிதி மாறன்? முற்றுப்புள்ளி வைத்த வேலுமணி... சர்கார் சமரசத்திற்கு முன்பு நேற்று நடந்தது என்ன?

By sathish kFirst Published Nov 10, 2018, 12:29 PM IST
Highlights

தீபாவளிக்கு ரிலீசாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மீண்டும் சென்சார் செய்யப்பட்டிருக்கிறது சர்கார் திரைப்படம்.

ரிலீசாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் தற்போது சர்கார் திரைப்படத்தில் இருந்து ஆளுங்கட்சியின் பரிந்துரையின் பேரில் சில காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. சில காட்சிகளில் வரும் வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருக்கின்றன.

சர்கார் திரைப்படத்தினை தயாரித்திருக்கும் சன்பிக்சர்ஸ் தரப்பு மறுபடியும் சென்சார் செய்யும் கருத்திற்கு ஆரம்பத்தில் இணங்கவில்லையாம். ஏற்கனவே சென்சார் செய்து தான் படம் வெளியாகி இருக்கிறது இதனால் மறுபடியும் சென்சார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி மறுத்து பேசி இருக்கின்றனர். அதன் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தங்கள் தரப்பினை எடுத்து கூறியதன் பெயரில் தான் இந்த சென்சார்க்கு சம்மதம் கிடைத்திருக்கிறது.

ஆளுங்கட்சியை நேரடியாக தாக்கும் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்பதால் சர்கார் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கங்களில் எல்லாம் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் கடும் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த நிலையில், திருப்பூர் சுப்பிரமணியன் தான் சன்பிக்சர்சிடம் நிலமையை விளக்கி இருக்கிறார். படம் ரிலீசாகி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே மூன்று நாட்களில் எண்ணிலடங்கா ரசிகர்களை இந்த படம் சென்றடைந்திருக்கிறது.

இப்போது அவர்கள் சொல்லும் சில காட்சிகளை செய்வதால் எந்த இழப்பும் நமக்கு ஏற்படப்போவது இல்லை. ஏற்கனவே மக்கள் இந்த காட்சிகளை பார்த்துவிட்டனர். மேலும் இந்த பிரச்சனைக்கு பிறகு வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் எல்லாம் இந்த காட்சி இப்போது பரவிக்கிடக்கிறது. இனி இதனை சென்சார் செய்வதால் நமக்கு எந்த இழப்பும் இல்லை. மேலும் பேனர் கிழிப்பு, திரையரங்கங்களில் மக்களை வைத்து பூட்டுவது என தொடர்ந்து வரும் எதிர்ப்புகளால் படம் பார்க்க வரும் மக்கள் கூட்டம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இதனால் படத்தை வாங்கி திரையிடும் எங்கள் தரப்பு தான் அதிகம் பாதிக்கப்படும். அவங்க சில காட்சிகளை தானே மியூட் பண்ண சொல்லி இருக்கிறாங்க. இலவசப்பொருள்களை தீயிலிடும் காட்சி அது கூட பாடலுக்கு நடுவில் சில நொடிகள் வரக்கூடிய காட்சி தான். அதை எடுப்பதால படத்துல எந்த மாற்றமும் வந்துடாது என கூறி இருக்கிறார் சுப்பிரமணியம்.

அதன் பிறகும் கூட இந்த விஷயத்தில் முருகதாஸும், விஜயும் தான் சம்மதம் சொல்லனும் என கூறி இருக்கிறது சன்பிக்சர்ஸ் தரப்பு. முடிவாக எல்லோரிடமும் கலந்து ஆலோசித்த பிறகு தான் அனைவர் சம்மதத்துடனும் சர்கார் படத்தினை மீண்டும் சென்சார் செய்ய சம்மதித்திருக்கின்றனர். 

சம்மதம் கிடைத்ததும் திருப்பூர் சுப்பிரமணியம் உடனடியாக ஆளுங்கட்சி அமைச்சர் வேலுமணியிடம் இந்த விவகாரத்தை தெரிவித்து நீங்க சொன்னபடி காட்சிகளை நீக்கிவிடுகிறோம் , நாங்களும் நிறைய பணம் போட்டிருக்கோம் , இந்த பிரச்சனைகளில் அதிகம் பாதிக்கப்படப்போறது நாங்க தான், அதனால எப்படியாவது இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவாங்க என கேட்டிருக்கிறார். மொத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அவர் எடுத்த முயற்சியின் அடிப்படையில் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது சர்கார் சென்சார் பிரச்சனை.

click me!