நாயுடு! மம்தா! பவார்! பட்நாயக்! யெச்சூரி! ஸ்டாலினை சந்திக்க படையெடுக்கும் தலைவர்கள்!

By sathish kFirst Published Nov 10, 2018, 10:48 AM IST
Highlights

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தேசியத் தலைவர்கள் வரிசையாக படையெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போது அசுர பலத்துடன் உள்ள பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் கட்சி கூட கூட்டணி பலத்தையே நம்பியுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.கவிற்கு எதிராக மாநில கட்சிகளே ஆட்சியில் உள்ளன. உதாரணத்திற்கு மேற்கு வங்கம், ஒடிசா, டெல்லி போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது.

ஆந்திராவிலும் கூட பா.ஜ.க ஆதரவுடன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. தெலுங்கானாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தெலுங்கானா ராட்ஷட்ரிய சமிதி – பா.ஜ.க இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. பீகாரில் பா.ஜ.க – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வலுவாக உள்ளது.

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் கூட பா.ஜ.க – சிரோன்மணி அகாலி தள கூட்டணி நீடிக்கிறது. இதனால் தேசிய அளவில் ஒரு மெகா கூட்டணியை அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும் – பகுஜன் சமாஜூம் இணைந்தால் தான் பா.ஜ.கவை வீழ்த்த முடியும் என்கிற நிலை உள்ளது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் அந்த கட்சிகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது.

இதே போல் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது. இதனால் அந்த கட்சியை நம்பி மெகா கூட்டணி அமைக்க பலரும் தயங்குகிறார்கள். இந்த நிலையில் தான் பா.ஜ.கவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் டெல்லியில் ராகுலை சந்தித்து பேசிய அவர் நேற்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேச உள்ளார்.

இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்து தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து சென்றுள்ளார். இதே போல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கூட ஸ்டாலினை சந்திக்க வர உள்ளார். மராட்டியத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவாரும் விரைவில் சென்னை வந்து ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்.

மேலும் ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கும் சென்னையில் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. போதாக்குறைக்கு மார்க்சிஸ்ட் தேசியச் செயலாளர் யெச்சூரியும் விரைவில் தமிழகம் வருகிறார். சந்திப்பின் நோக்கமே ஸ்டாலினுடனான சந்திப்பு தான்.

இப்படி வரிசையாக தலைவர்கள் தமிழகத்திற்கு படையடுக்கும் சூழலில் அனைவருமே ஸ்டாலினை தான் தங்களின் முதல் சாய்சாக வைத்துள்ளனர். இது தி.மு.க தொண்டர்களை மட்டும் அல்லாமல் நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது. கலைஞரை போன்று தேசிய அளவில் ஸ்டாலின் முக்கியத்துவம் பெற இந்த சந்திப்புகள் உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

click me!