30 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்..! இறங்கி வந்த காங்கிரஸ்..! சாதித்துக் காட்டிய திமுக..!

By Selva KathirFirst Published Feb 6, 2021, 10:42 AM IST
Highlights

கடந்த தேர்தலில் ஒதுக்கிய 41 தொகுதிகள் என்பதில் காங்கிரஸ் பிடிவாதம் காட்டி வந்த நிலையில் அதே பிடிவாதத்துடன் 21 தொகுதிகள் என்பதில் திமுக உறுதியாக இருந்த நிலையில் தற்போது 31 தொகுதிகளுக்கு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தேர்தலில் ஒதுக்கிய 41 தொகுதிகள் என்பதில் காங்கிரஸ் பிடிவாதம் காட்டி வந்த நிலையில் அதே பிடிவாதத்துடன் 21 தொகுதிகள் என்பதில் திமுக உறுதியாக இருந்த நிலையில் தற்போது 31 தொகுதிகளுக்கு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரசுக்கு 9 தொகுதிகளை தமிழகத்தில் அள்ளிக் கொடுத்தது திமுக. புதுச்சேரியிலும் ஒரே ஒரு எம்பி இடத்தை காங்கிரசுக்கே திமுக விட்டுக் கொடுத்தது. அத்தோடு வருங்கால பிரதமர் ராகுல் காந்தி என்று மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தலில் தமிழகம், கேரளா தவிர்த்து மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதன் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கியதை போல் தாராளமாக சட்டப்பேரவை தேர்தலுக்கு தொகுதிகளை தர முடியாது என்பதை கடந்த வருடமே திமுக காங்கிரசிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது. திமுக 200 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது என்கிற குறிக்கோளுடன் தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. இதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதுடன், கூட்டணி கட்சி வேட்பாளர்களை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களம் இறக்கும் வகையில் அக்கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சம்மதம் தெரிவித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால் தேசிய கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ், இடதுசாரிகள் கடந்த தேர்தல்களில் திமுக தங்களுக்கு ஒதுக்கிய அளவிற்கு தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. அதிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. கடந்த முறை 41 தொகுதிகளை வழங்கிய நிலையிலும் எட்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. கடந்த முறை இந்த 41 தொகுதிகளில் திமுக போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. எனவே இதனை காரணம் காட்டி இந்த முறை 21 தொகுதிகள் என்பதில் திமுக பிடிவாதமாக உள்ளது.

ஆனால் 41 தொகுதிகள் என்பது தான் தங்களுக்கு கவுரமானதாக இருக்கும் என்று காங்கிரஸ் கூறி வந்தது. ஆனால் 41 தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்று திமுக திட்டவட்டமாக கூறி வரும் நிலையில் தற்போது 31 தொகுதிகளுக்கு  காங்கிரஸ் இறங்கி வந்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்கான தொகுதிப் பட்டியலையும் திமுக தலைமைக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். தற்போதைய சூழலில் திமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் சட்டப்பேரவைக்கு கணிசமான எம்எல்ஏக்களை அனுப்ப முடியும் என்கிற நிதர்சனத்தை காங்கிரஸ் புரிந்து கெண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அங்கு காங்கிரசால் செல்ல முடியாது. 3வது அணி அமைக்க வலுவான கட்சிகளும் இல்லை. எனவே திமுகவிடம் 31 தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று புதிய டீலிங்கிற்காக காங்கிரஸ் காய் நகர்த்தியுள்ளது. ஆனால் தற்போதும் கூட திமுக 31 தொகுதிகளுக்கு ஓகே சொல்லவில்லை என்கிறார்கள். காங்கிரஸ் 41ல் இருந்து இறங்கி வந்திருப்பதை திமுக வெற்றியாக பார்க்கிறது. இதே நெருக்கடியை தொடர்ந்தால் காங்கிரஸ் கொடுப்பதை கொடுங்கள் என்று இறங்கி வந்துவிடும் என்று திமுக இன்னமும் நம்புகிறது.

மேலும் 21 தொகுதிகள் வழங்குவதாக கூறியிருந்த நிலையில் அதனை 25 தொகுதிகளாக உயர்த்துவது பற்றி திமுக பரிசீலிக்கும் என்கிறார்கள். ஆனால் அதற்கு மேல் காங்கிரசுக்கு தொகுதிகளை வழங்க வாய்ப்பில்லை என்ற சொல்கிறார்கள். விரைவில் இது குறித்து பேச காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மறுபடியும் சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.

click me!