மைனாரிட்டி திமுக அரசுக்கு ஆதரவு கொடுத்தது காங்கிரஸ்... துரைமுருகனுக்கு காங்கிரஸ் பதிலடி... கூட்டணியில் கதகளி!

By Asianet TamilFirst Published Jan 16, 2020, 9:04 AM IST
Highlights

 "2006-ல் திமுக சிறுபான்மை அரசாங்கத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் எந்தவிதமான பங்கையும் கேட்காமல் பெருந்தன்மையுடன் வழி நடத்தினோம். அந்த ஆட்சியில் துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அன்றைக்கு அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் தயவு தன்னுடைய பதவியைக் காப்பாற்ற தேவைப்பட்டது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது”. என்று மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

2006-ல் திமுக மைனாரிட்டி அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்து எந்த பங்கும் கேட்காமல் பெருந்தன்மையுடன் நடந்தது காங்கிரஸ். அந்த ஆட்சியில் துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியைக் காப்பாற்ற காங்கிரஸ் தேவைப்பட்டது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் விமர்சித்துள்ளார்.


நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு சரியான ஒதுக்கீட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் வழங்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் சட்டப்பேரவைக் குழு தலைவர் ராமசாமியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் திமுகவை விமர்சித்தனர். “திமுகவின் செயல் கூட்டணி தர்மத்துக்கு எதிரானது” என்றும் அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அழகிரியின் கருத்து ப. சிதம்பரம் ஆதரவாகவும் பேசினார்.

இதனையத்து அகில இந்திய காங்கிரஸ் நடத்திய சிஏஏ-வுக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக புறக்கணித்தது. இதன் பிறகு மன்னிப்பு கேட்காத குறையாக அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால், இதை சட்டை செய்யாத திமுக, இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்காததற்கு அழகிரியின் அறிக்கையே காரணம் என்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி தொடருமா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்றும் டி.ஆர். பாலு  அளித்த பேட்டி கூட்டணியில் உஷ்ணத்தைக் கூட்டியது. ஏற்கனவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் எழுந்து நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டி கூட்டணிக்குள் கொத்து பரோட்டா போட வைத்துள்ளது.
“திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஓட்டே கிடையாது. எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். தற்போது வரை திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது, அவர்கள் பிரியவில்லை. திமுக கூட்டணியில் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. வெளியே போ எனச் சொல்வதில்லை. அவர்களே போனாலும் போகாதே போகாதே என் கணவா என்று ஒப்பாரி வைப்பதில்லை” என அதிரடியாக தெரிவித்தார்.


துரைமுருகனின் இந்தப் பேச்சு கூட்டணிக்குள் குண்டு வைத்துவிட்டது. இதுவரை மேல்மட்டத்தில் மட்டுமே விமர்சித்த நிலை மாறி, இரண்டாம் கட்ட தலைவர்களும் பேசத் தொடங்கிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு இல்லை என்று விமர்சித்த  துரைமுருகனுக்கு,“வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் தோன்றவில்லை” என்று ட்விட்டரில் பதிவிட்டு கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர்களில் ஒருவரான மோகன் குமாரமங்கலம், துரைமுருகனை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “காங்கிரஸ் பற்றி துரைமுருகன் பேசியதை நான் வன்மையாகக் கண்டிருக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி போனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார். துரைமுருகனுக்கு ஞாபக சக்தி குறைவு ஆகிவிட்டது. 2004 முதல் 2019 வரை ஐந்து முறை திமுக, காங்கிரஸ் ஒரே கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.


2006-ல் திமுக சிறுபான்மை அரசாங்கத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் எந்தவிதமான பங்கையும் கேட்காமல் பெருந்தன்மையுடன் வழி நடத்தினோம். அந்த ஆட்சியில் துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அன்றைக்கு அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் தயவு தன்னுடைய பதவியைக் காப்பாற்ற தேவைப்பட்டது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது”. என்று மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

click me!