கூட்டணியை விட்டு போனா நாங்க தடுக்க மாட்டோம் !! ஆனா போகாதீங்கன்னு கெஞ்சமாட்டோம் … காங்கிரஸை பங்கம் செய்த துரை முருகன் !!

By Selvanayagam PFirst Published Jan 16, 2020, 7:38 AM IST
Highlights

''கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி  விலகினாலும் கவலையில்லை என்று அதிரடியாக தெரிவித்திருந்த திமுக  பொருளாளார் துரை முருகன், தற்போது அவர்களை நாங்களாக வெளியே போங்கள் என்று சொல்ல மாட்டோம், அதே நேரத்தில் அவர்களாக சென்றால் கையைப் பிடித்து கெஞ்சமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு சரியான ஒதுக்கீட்டை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் வழங்கவில்லை. பல இடங்களில் காங்கிரஸ் தனியாகவும் தி.மு.க., தனியாகவும் போட்டியிட்ட காட்சிகளும் அரங்கேறின.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் 'சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது. ஒரு ஊராட்சி தலைவர் துணை தலைவர் பதவி கூட காங்கிரசிற்கு வழங்கப்படவில்லை' என அதிருப்தி தெரிவித்திருந்தார். 

மேலும் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த மறைமுக தேர்தலில் காங்கிரஸ். கவுன்சிலர்கள் பலர் தி.மு.க. சார்பில் நின்ற தலைவர் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்காமல் எதிர் முகாமான அதிமுகவுக்கு ஆதரவு அளித்து அக்கட்சியினரை வெற்றி பெற வைத்தனர்.

இது திமுக. தரப்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இந்தச் சூழலில் பொங்கலையொட்டி திமுக தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி வேலுார் காட்பாடியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ். விலகினாலும் அதை பற்றி கவலைப்பட போவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஓட்டே கிடையாது. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். 

தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி  உள்ளது… பிரியவில்லை. திமுக கூட்டணியில் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. வெளியே போ என சொல்வதில்லை. அவர்களே போனாலும் போகாதே போகாதே என் கணவா என்று ஒப்பாரி வைப்பதில்லை என அதிரடியாக தெரிவித்தார்..

எங்கள் கூட்டணியில் உள்ளவர்களை மரியாதையாகவே நடத்துவோம். கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. 
 

click me!