‘8 ஆண்டுகால சாதனைகளைச் சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதற்கு நிர்மலா சீதாராமனுக்கு எந்த தகுதியும் இல்லை’ என்று விமர்சித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி.
ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து 250 கி.மீ கிராமங்கள் வழியாக நடைபயணம் செல்ல உள்ளனர். இதனை துவக்கி வைத்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, ‘துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியைப் படிக்காதீர் என்கிற அணுகுமுறையினால் தமிழகம் தனித்து விடப்பட்டுள்ளதாகக் கூறியதன் மூலம் தமிழர்களின் உணர்வை அவர் புண்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்ற நேருவின் உறுதிமொழியால் பெற்ற சட்டப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள். இதன்மூலம் தமிழகத்திற்கு விரோதமாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.
60 ஆண்டுகளில் அடித்தளமிட்டு உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக உயர்த்திய பெருமை காங்கிரஸ் ஆட்சிக்குத்தான் உண்டு. 8 ஆண்டுகால சாதனைகளைச் சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதற்கு நிர்மலா சீதாராமனுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை ஏறத்தாழ 20 ஆயிரத்து 860 கோடி ரூபாய் உள்ளது. இதை வழங்காமல் தமிழகத்தின் மீது நிதி அமைச்சர் பழி சுமத்துவது கண்டனத்திற்கு உரியது.
9ஆவது, 10ஆவது நிதிக்குழுவில் 60 பைசா வழங்கிய நிலையிலிருந்து தற்போது 15ஆவது நிதிக்குழு பரிந்துரையின் மூலம் 35 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அரசுகளின் நிதி ஆதாரம் பறிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லுலு மால்கள் தொடங்குவதைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். ஆனால் கர்நாடகாவில் லுலு மால் இயங்குவதை மூடிமறைத்து விட்டு தமிழகத்தில் எதிர்ப்பது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. காங்கிரசையும் திமுகவையும் அழிகிற நிலையில் இருப்பதாகக் கூறுகிறார். தோல்வியிலிருந்து பாஜக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை’ என்று கூறினார்.