
முள்ளி வாய்க்கால் கருத்தரங்கில் அண்ணாமலை
இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது முள்ளி வாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை நடைபெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வருகிற 14 ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்னையன்,திமுக சார்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சி வேலுச்சாமி , பாஜக சார்பாக அதன் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
பெரியார் திராவிடர் கழகம் புறக்கணிப்பு
இந்தநிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருந்தரங்கிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்துள்ள முள்ளிவாய்க்கால் கருத்தரங்கில் பாஜக மாநில தலைவர் பெயரும் அழைப்பிதழில் பதிவிட்டு இருப்பதால் அந்த கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மே 17 அமைப்பு புறக்கணிக்க முடிவு
இதே போல முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கருத்தரங்கில் இருந்து பாஜக வெளியேற்றப்படாவிடில், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மே 17 இயக்கம் பங்கேற்காது எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதே போல திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் யாரும் கருத்தரங்கில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் கருந்தரங்கை நடத்துவதில் தற்போது சிக்கலான நிலை உருவாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
பற்றி எரியும் இலங்கை.. சைலண்ட்டாக வெளிநாட்டுக்கு எஸ்கேப்பாக போகும் மகிந்த ராஜபக்சே?