தேர்தலுக்காக தீயாக வேலை செய்யும் காங்கிரஸ்.. குறைந்தது 50 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு தெறிக்கவிடும் வியூகம்.!

By Asianet TamilFirst Published Aug 26, 2020, 9:11 AM IST
Highlights

திமுகவிடமிருந்து கணிசமான மற்றும் வெற்றி வாய்ப்புள்ள  தொகுதிகளைப் பெற வசதியாக காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது. 

பீகார் தேர்தல் அக்டோபர், நவம்பரில் முடிந்த பிறகு தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்த உள்ளது தேர்தல் ஆணையம். தேர்தலை எதிர்கொள்ள கட்சிகளும் தயாராகிவருகின்றன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மூத்தத் தலைவர்களுடன் தொடர்ந்து தேர்தல் தொடர்பாக ஆலோசித்துவருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் எல்லாம் அப்படியே திமுக கூட்டணியில் உள்ளதால், அந்தக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது வரை திமுகவில் ஆலோசிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் கடைசி கட்ட தொகுதி உடன்பாடு  நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்வது பற்றி திமுக ஆலோசித்துவருவதாக தெரிகிறது. “தங்களுக்குரிய தொகுதிகளை அடையாளம் காணும்படி காங்கிரஸ் கட்சியை திமுக தலைமை கேட்டுக்கொண்டதாக” தகவல்களும் உலா வருகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இவற்றில் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கிய பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. எனவே, இந்த முறை அதுபோன்று நடக்கக் கூடாது என்று திமுக விரும்புகிறது. 
இதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியும் தற்போதே தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறது. தொகுதிகளில் வெற்றி பெற ஏதுவாக தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தங்கள் பணிகளை  மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளது. காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிர்வாகிகளிடமிருந்து கருத்து கேட்கும் பணியை காங்கிரஸ் முதல் கட்டமாக செய்ய உள்ளது. அதன் பிறகு மாநில நிர்வாகிகள் வாரத்துக்கு மூன்று தொகுதிகள் வீதம் விசிட் அடித்து தொகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மேலும் காங்கிரஸ் கேட்க உத்தேசித்துள்ள தொகுதிகளில் பூத் கமிட்டி பணிகள் முடிக்கப்பட்டுவிட்டனவா என்றும் மாநில நிர்வாகிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இறுதியாக வாக்காளர்களை சென்றடைய காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக தொகுதிக்குள் பேரணிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது” என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்கிறார்கள். 
தேர்தல் பணிகளை திட்டமிட்டு முடித்து, திமுகவிடமிருந்து கணிசமாகவும் வெற்றி பெறக்கூடிய  தொகுதிகளையும் பெற வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் எண்ணம். பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 8 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளதால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட குறைந்தபட்சம் 50 தொகுதிகளைக் கேட்டு பெற வேண்டும் என்பதிலும் காங்கிரஸ் கட்சி தீயாக வேலை செய்வதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!