ரூ2000 நோட்டுக்கு குட்பை காட்டிய ரிசர்வ் வங்கி.! மீண்டும் எப்போ வரும் ரூ2000... புழக்கத்தில் இல்லையே ஏன்.?

By T BalamurukanFirst Published Aug 26, 2020, 8:27 AM IST
Highlights

கடந்த 2019-20 நிதியாண்டில் புதிதாக ரூ.2,000 நோட்டு அச்சிடவில்லை எனவும், இந்த நோட்டின் புழக்கம் சில ஆண்டுகளில் குறைந்துவிடும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 

கடந்த 2019-20 நிதியாண்டில் புதிதாக ரூ.2,000 நோட்டு அச்சிடவில்லை எனவும், இந்த நோட்டின் புழக்கம் சில ஆண்டுகளில் குறைந்துவிடும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில்... "கடந்த 2018 மார்ச் இறுதியில் 33,632 லட்சம் ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இது 32,910 லட்சமாகவும், கடந்த மார்ச் மாதம் 27,398 லட்சமாகவும் இருந்தது. மொத்தம் உள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் இது 2.4 சதவீதம் மட்டுமே. இது கடந்த 2018 மார்ச் இறுதியில் 3.3 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் 3 சதவீதமாகவும் இருந்தது.

மதிப்பு அடிப்படையில் கணக்கிட்டால், மொத்தம் உள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் ரூ.2,000 நோட்டு கடந்த மார்ச் இறுதியில் 22.6 சதவீதம் மட்டுமே. இது கடந்த 2018 மார்ச்சில் 37.3 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச்சில் 31.2 சதவீதமாகவும் இருந்தது. மாறாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டு புழக்கம், கடந்த 3 ஆண்டுகளில் மதிப்பு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டில் புதிதாக ரூ.2,000 நோட்டு அச்சிடப்படவில்லை. கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த நிதியாண்டில் அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூபாய் நோட்டு சப்ளை 23.3 சதவீதம் குறைந்து விட்டது. கடந்த நிதியாண்டில் புதிதாக 1,463 கோடி ரூ.500 நோட்டு அச்சிட ஆர்டர் வழங்கப்பட்டது. இதில் 1,200 கோடி நோட்டு வங்கிகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதற்கு  முந்தைய ஆண்டு 1,169 கோடி நோட்டு அச்சிட ஆர்டர் கொடுக்கப்பட்டு, 1,147 கோடி நோட்டு சப்ளை செய்யப்பட்டது.

இதுபோல், கடந்த 2019-20 நிதியாண்டில் 330 கோடி ரூ.100 நோட்டு, 240 கோடி ரூ.50 நோட்டு, 205 கோடி ரூ.200 நோட்டு, 147 கோடி ரூ.10 நோட்டு, 125 கோடி ரூ.20 நோட்டு அச்சிட ஆர்டர் வழங்கப்பட்டது. இதில் பெரும்பகுதி நோட்டு வங்கிகளுக்கு புழக்கத்துக்காக சப்ளை செய்யப்பட்டன. ரூ.2,000 நோட்டு கருப்பு பண பதுக்கலுக்கு வழி வகுக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஏற்கெனவே, வங்கி ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டு வைப்பது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அச்சிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் இவற்றின் புழக்கம் படிப்படியாக குறைந்து விடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

click me!