காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் சட்டபேரவை கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவருடைய எம்.பி பதவி பறிக்கபட்டது. இதனை கண்டிக்கும் வகையில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
அப்போது அவர்கள் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் எடுத்து கொண்டு சட்டசபைக்கு வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், மத்திய அரசை கண்டித்தும் ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டது ஒரு ஜனநாயக படுகொலை என மத்திய அரசை விமர்சித்து காங்-திமுக உறுப்பினர்கள் பேசினர் இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்த எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பேச்சுக்கள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கம் படுவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்து பாஜக ஜனநாயக படுகொலையை செய்துள்ளதாகவும், அதானி குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்காமல் பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி ஆள வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக இது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த நாட்டுக்காகவும், நாட்டு ஒற்றுமைக்காகவும் பாடுபட்டுள்ள நிலையில் அவர் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார் என தெரிவித்தார். உடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் இருந்தார்.