
தமிழகத்தில் அரசியல் காட்சிகள் விசித்திரமாக அரங்கேறத் தொடங்கியுள்ளன. சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் அதிமுக எம்எல்ஏக்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்ற சஸ்பென்ஸ் எல்லோரையும் மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாக்கி இருக்கிறது.
அதே நேரத்தில் ஓபிஎஸ் க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவு தருவதா? அல்லது சசிகலாவுக்கு ஆதரவு தருவதா? என்பது குறித்து முடிவு செய்ய டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குழு சென்று ராகுல் காந்தி முன்பு விவாதித்தது.
அப்போது திருநாவுக்கரசர் மற்றும் தங்கபாலு ஆகியோர் சசிகலாவை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ஆனால் தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ள நிலையில் காங்கிரஸ் ஆதரவளிக்கக்கூடாது என ப.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், மணி சங்கர் அய்யர், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காங்கிரசை திருநாவுக்கரசர் சசிகலாவிடம் விற்கப் போகிறார் என இளங்கோவன் கூறியதும் அங்கு பெரும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் மிக மோசமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அது காங்கிரசை பாதிக்கும் என்று ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தார்.
திமுக என்ன முடிவெடுக்கிறதோ அதையே காங்கிரசும் எடுக்க வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்தார்.அப்போதும் இளங்கோவன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து யாருக்கு ஆதரவி வேண்டாம் என ராகுல் காந்தி முடிவு செய்து அறிவித்தாக கூறப்படுகிறது.