
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் நெடுங்காலமாக அங்கம் வகிக்கிறது காங்கிரஸ். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தாறுமாறாய் தோற்றது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் மூலம் மீண்டும் உறவு புதுப்பிக்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் தமிழக காங்கிரஸ் தனது திறமையையும், தனித்துவத்தையும், மரியாதையையும் கூட்டணி தலைவனான தி.மு.க.விடம் அடகு வைத்துவிட கூடாது! என்று சீனியர் காங்கிரஸ் புள்ளிகள் எப்போதுமே வெளிப்படையாக பேசுவார்கள்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசர் அமர்த்தப்பட்டபோது ‘தி.மு.க.விடம் கையேந்தும் நிலை மாறும்.’ என்று நம்பிக்கையாக பேச்சு எழுந்தது. காரணம்?...எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்து தி.மு.க.வை ஒரு காலத்தில் எதிர்த்தவர் திருநாவுக்கரசர். எனவே நிச்சயம் அவர் தி.மு.க.வுக்கு அடிபணிந்து நடக்கமாட்டார் என்று நம்பப்பட்டது.
இதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் திருநாவுக்கரசரும் அவ்வப்போது தி.மு.க.விடம் இணக்கம் காட்டாமல் சிலுப்புவார். ஸ்டாலினுக்கும், அரசருக்கும் ஆகவே ஆகாது! என்றும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக காங்கிரஸின் தலைமை மாற்றப்பட இருக்கிறது என்று ஒரு தகவல் வெடித்தது. ஆனால் ராகுல் அதை சூசகமாக மறுத்து அரசரையே தொடர சொல்லியிருக்கிறார்.
தலைமையின் அருளை பெற்றுவிட்ட அரசர் கெத்தாக கிளம்பி தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸை தமிழகத்தில் வழிநடத்துவார் என்று பார்த்தால் அவரோ சாஸ்டாங்கமாக தி.மு.க.வின் காலில் விழுந்துவிட்டார் என்கிறார்கள். ஸ்டாலினை மையப்படுத்தி அரசர் பேசி வரும் பேச்சுக்கள் அவரது பதவிக்கும், முந்தைய தோரணைக்கும் பொருந்துவதல்ல என்று பெரும் விமர்சனங்கள் காங்கிரஸிலிருந்து கிளம்பியுள்ளன. அதிலும் ‘தன்னை சந்திக்க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி டைம் கொடுக்காவிட்டால் இனி அவர் தமிழகத்திற்கு எங்கு, எப்போது வந்தாலும் கறுப்புக்கொடி காட்டுவோம்.’என்று சொல்லியிருப்பதை வெகுவாக வெறுக்கிறார்கள் நடுநிலை காங்கிரஸ்காரர்கள்.
இதுபற்றி ஆதங்கப்படும் அவர்கள் “ஸ்டாலினே சரணம் என்று தி.மு.க.வின் காலில் சாஸ்டாங்கமாகவே விழுந்துவிட்டார் திருநாவுக்கரசர். எங்களின் பலத்தை குறைத்து மதிப்பிட துவங்கியிருக்கும் ஸ்டாலின் இனி தேர்தல்களில் குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதோடு, ஒப்பேறாத தொகுதிகளையும் எங்கள் தலையில் கட்டுவார். எல்லாம் எங்கள் விதி.” என்று புலம்புகின்றனர்.
அரசருக்கு ஆகாத காங்கிரஸ் கோஷ்டியோ, ஸ்டாலினிடம் அரசர் சரண்டரான கதையை அப்படியே ராகுலுக்கு மெயிலில் வர்ணித்து ஆதங்கத்தை கொட்டியுள்ளது.
இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாத அரசர் தரப்போ ‘ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தின் எல்லா எதிர்கட்சி தலைவர்களையும்தான் மோடி சந்திக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம். இதில் சரண்டர் எங்கிருந்து வந்தது?’ என்கிறது.
காங்கிரஸ்னாலே குழப்பம்தானேபா!