
சமுதாயத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் பாஜக முதலிடம் பெற்றுள்ளது.
ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான சங்கம் என்னும் அமைப்பானது சமுதாயத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வழக்குகளை எதிர்கொண்டு வரும் அரசியல்வாதிகள், எம்பி., எம்.எல்.ஏக்கள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளது.
இந்த ஆய்வில் நாடு முழுவதும் 15 எம்பிக்கள், 43 எம்.எல்.ஏக்கள் என பதவியில் இருக்கும் மொத்தம் 85 பேர் இத்தகைய வழக்குகளில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இவர்களில் பாஜக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் முதலிடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த கட்சியை சேர்ந்த 10 எம்.பிக்கள் உள்பட 27 பேர் மீது இத்தகைய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவை அடுத்து அடுத்தடுத்த இடங்களில் அனைத்து இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளை சேர்ந்த தலா 6 பேர் இத்தகைய வழக்குகளில் சிக்கியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம், சிவசேனா ஆகிய கட்சிகள் தலா 3 வழக்குகளுடனும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளத்தைச் சோ்ந்த தலா 2 பேரும் இந்த வழக்குகளில் சிக்கியுள்ளனர்.