
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்ச்சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருக்குமானால் அது திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்டார். அது தமிழக மக்களுக்கு துயரமான நாள். உச்சநீதிமன்றம் பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருந்தாலும், தனது உத்தரவில் அவரை நிரபராதி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று முதல் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நிரபராதி விடுவிக்கப்பட்டது போன்று முதலமைச்சர் நடந்து கொள்வதாகவும், அவரது இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுத் தான் அவர் முதலமைச்சராக பதவியேற்றாரா என்ற சந்தேகம் எழுகிறது. பாஜகவை பொறுத்தவரை 7 பேருமே குற்றவாளிகள் தான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. சிறையில் இருந்து வெளி வந்திருப்பவர் கொண்டாடப்படக் கூடியவர் அல்ல. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. அக்கட்சிக்கு ஆளுமை இருக்குமானால் அது திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். முன்னாள் பிரதமரை கொன்றவர்களை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பது தவறு.
உச்சீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மீதமுள்ள 6 பேருக்கும் நேரடியாக பொருந்தாது. நெல்லையில் 3 பேர் உயிரிழந்த கல் குவாரி காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த குவாரி திறக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே இன்று பேரறிவாளன் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.