
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் வரும் நிலையில் இவ்வாறு குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன் முருகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தன் மீது பதியப்பட்ட வழக்கு ஆதாரமற்றது என்றும் அது புனையப்பட்ட வழக்கு என்றும், அதேபோல் தண்டனையை முழுவதுமாக அனுபவித்து விட்ட நிலையிலும் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு நீதி வேண்டுமென பேரறிவாளன் தரப்பில் வாதிட பட்டு வந்தது.
இந்நிலையில் பேரறிவாளனை விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்களால் வரவேற்று பாராட்டப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேரறிவாளனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். பேரறிவாளன் திமுக கூட்டணி கட்சியிலுள்ள தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். ஆனால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேரறிவாளன் இன்னும் கொலை குற்றவாளிதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். பேரறிவாளனை மீண்டும் கைது செய்து சிறையில் தள்ளும் வரை தங்களது போராட்டம் ஓயாது என அவர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தமிழக முதலமைச்சரை விமர்சிக்கும் வகையில் ஒரு கொலைக் குற்றவாளியை அழைத்து கொஞ்சுவதும் கட்டி அணைப்பதும் சரிதானா என காங்கிரஸார் கொந்தளித்து வருகின்றனர். திமுக காங்கிரஸ் இடையே இது கருத்து மோதலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆரத் தழுவிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை குஷ்பு பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை முதுகெலும்பு இல்லாதவர்களின் செயலாகவே உள்ளது எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.