பாஜக அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்...! அண்ணாமலையோடு அவசர ஆலோசனை

By Ajmal KhanFirst Published May 19, 2022, 3:19 PM IST
Highlights

மாநிலங்களவை தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர்.
 

ஜூன் 10 மாநிலங்களவை தேர்தல்

நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழத்தில் உள்ள கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் படி  திமுக சார்பாக 4 பேரையும் அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தநிலையில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் யார்?

இதனையடுத்து அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தநிலையில் இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கு ராஜ்யசபா இடம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக செம்மலை, சிவி.சண்முகம், கோகுல இந்திரா, தமிழ்மகன் உசேன், சையதுகான்,ராஜ்சத்யன், உள்ளிட்டவர்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.

பாஜக அலுவலகத்தில் அதிமுக

இந்தநிலையில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்க ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி.வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம் ஆகியோர்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தமிழகத்தை பொறுத்தவரை 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை 66 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. எனவே சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பாஜகவின் ஆதரவை அதிமுக கோரியுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை ராஜ்யசபா தேர்தலில், அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என கூறினார். இதனையடுத்து இன்று மாலை அதிமுக உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


 

click me!