தோட்டத்திற்கே போய் ராமதாஸை பார்த்த அதிமுக மா.செக்கள்.. அடுத்த சில மணி நேரங்களில் வந்த மாஸ் அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2022, 4:22 PM IST
Highlights

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி அறிவித்துள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக தற்போது இந்த ஆதரவை வழங்கியுள்ளது. 

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி அறிவித்துள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக தற்போது இந்த ஆதரவை வழங்கியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இருந்தவரை பாமக உடன் கூட்டணி என்ற நிலைபாட்டில் இருந்து வந்தார், ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுக மற்றும் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. ஆனால் கிராமப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போதிய இடம் வழங்கவில்லை எனக் கூறி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை விட்டு விலகி தனித்து களம் கண்டது பாமக. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக மீண்டும் களமிறக்க பாமக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதாவது தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 29ம் தேதி நிறைவடைகிறது, அந்த இடங்களுக்கு அதிமுக திமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் குழு இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எழுதிய கடிதத்தை மருத்துவர் அய்யா அவர்களிடம் ஒப்படைத்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினரும் கேட்டுக் கொண்டனர்.

அதிமுகவின் கோரிக்கை குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா அவர்கள், நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதை மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!