
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு குறைந்த சீட் ஒதுக்கப்படுமேயானால், திமுகவுடன் கூட்டணியில் இருப்பதற்குப் பதிலாக காங்கிரஸ் தனித்தே போட்டியிடலாம் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான சீட்டுகள் ஒதுக்கப்படுவதில்லை. கூட்டணியில் இருந்துவரும் போதிலும் ஆட்சியில் பங்களிப்பு அளிப்பதில்லை போன்ற அதிருப்திகள், காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நிலவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அவர்கள் பேசியுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், காமராஜர் பிறந்தநாளுக்கு முன்னதாக 50 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் தமிழகத்தில் ஆய்வு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சித் தேர்தலில் 25% தொகுதி பங்கீடு பெற வேண்டும். ஆட்சியில் பங்களிக்க ஒப்புக்கொண்டால் மட்டும்தான் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் திமுகவுடன் கூட்டணியே வேண்டாம். நாம் தனித்தே போட்டியிடுவோம்.
திமுகவுடன் கூட்டணி கட்சியாக இருந்துவருகிறோம். ஆனால் கூட்டணி கட்சிக்கான மரியாதையை திமுக வழங்குவதில்லை. திமுக நடத்தும் கூட்டத்திற்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுப்பதே இல்லை. எனவே இதையெல்லாம் சரி செய்ய வேண்டும். சரி செய்யாமல், திமுகவுடன் கூட்டணி சேரக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
அதன்பிறகு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கர்சர், கூட்டணி குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அதை பார்த்துக்கொள்வோம். இதுதொடர்பாக டெல்லி தலைமைக்கு தெரிவிப்போம். உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்த திமுகவுடன் பேச குழு அமைக்கப்படும். அதுவரை திமுகவுக்கு எதிராக எந்தவிதமான கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர் அறிவுறுத்தியுள்ளார்.