
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து இன்று வழக்கம்போல் பருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போக முடியுமோ? முடியாதோ என அச்சம் அடைந்திருந்த பொது மக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்
ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்கள், குழந்தைகள், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 8 நாட்களாக முழுமையாக இயங்காமல் இருந்த அரசு பேருந்துகள் இன்று காலை முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. போக்குவரத்துத் தொழிலாளர்களும் இன்று அதிகாலையிலேயே பேருந்துகளை எடுத்து ஓட்டத் தொடங்கினர்.
பொதுவாக போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே ஓர் ஆத்மார்த்தமான உறவு இருந்து வருகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் மாமன் மச்சான் முறை கொண்டாடித்தான் உணர்வுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டம் ஒரு வகையில் பொது மக்களை பாதித்தாலும், ஊழியர்கள் போராட்டத்தை பெரும்பாலான பொது மக்கள் ஆதரிக்கவே செய்தனர்.
இந்நிலையில் இன்று பணிக்குத் திரும்பிய போக்குவரத்துத் தொழிலாளர்களை பயணிகள் வரவேற்றனர், அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.இதே போல் தொழிலாளர்களும் தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்கு பொது மக்களிடம் மன்னிப்புக் கோரினர்.
தற்போது வழக்கம்போல் பொங்கலை கொண்டாட பொது மக்கள் நிம்மதியாக தங்களது சொந்த ஊர் நோக்கி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.