காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் எவை...? தொகுதிகளை ரிசர்வ் செய்யும் கோஷ்டி தலைவர்கள்..!

By Asianet TamilFirst Published Feb 27, 2019, 5:38 PM IST
Highlights

திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து அதில் 9 தொகுதிகளை வழங்கும்படி திமுகவிடம் பேசிவருகிறது காங்கிரஸ். 

திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து அதில் 9 தொகுதிகளை வழங்கும்படி திமுகவிடம் பேசிவருகிறது காங்கிரஸ். 

நாடாளுமன்ற மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இ.யூ.மு.லீக் மற்றும் கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., சிபிஐ. சிபிஎம், விசிக, மமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை. 

இந்நிலையில் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்ட காங்கிரஸ், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை பெறுவதில் தற்போது மும்மரம் காட்டிவருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டு உள்ளது. என்றாலும் வெற்றி வாய்ப்புள்ள 18 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் காங்கிரஸ் அளித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த 18 தொகுதிகளில் காஞ்சிபுரம், ஆரணி, அரக்கோணம், சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்பட 18 தொகுதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், ஈரோடு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர், சேலத்தில் கே.வி.தங்கபாலு, தேனியில் ஜே.எம்.ஆரூண், கன்னியாகுமரியில் எச்.வசந்தகுமார், ஆரணியில் விஷ்ணு பிரசாத், விருதுநகரில் மாணிக் தாகூர் ஆகியோர் களமிறங்க விரும்புவதால், அந்தத் தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கேட்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், தி.மு.க. தரப்போ எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, அனைத்து கட்சிகளுடன் பேசி தொகுதி உடன்பாட்டை முடித்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது நிறைவடையும் என்ற தவிப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. 

click me!