தமுமுக பெயரில் குழப்பம்.. போலீஸ் உடனே தடுக்கனும்.. கொதிக்கும் தமுமுக பொ.செ ஹாஜாகனி.

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2021, 2:44 PM IST
Highlights

இந்நிலையில் 13.7.2021 அன்று தமுமுகவின் தலைமையகம் அமைந்துள்ள மண்ணடி வடமரைக்காயர் தெரு அருகே அங்கப்பன் தெருவில் ஒரு வாடகைக் கட்டடத்தில் தமுமுக மாநிலத் தலைமையகம் என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.

தமுமுக பெயரில் குழப்பம் ஏற்படுத்தும் தீய சக்திகளை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் பொதுச் செயலாளர் பேரா. ஜெ. ஹாஜாகனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு :-

இருபத்தைந்தாண்டுகளைத் தாண்டி, சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் தொண்டாற்றிவரும் தமுமுக, இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வத் தொண்டு இயக்கமாகும். 2003ஆம் ஆண்டு இது அறக்கட்டளையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமுமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமுமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து செ. ஹைதர் அலி, தமுமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டார். அவரது நீக்கத்தை அங்கீகரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமுமுகவின் பெயர், கொடி, வண்ணம் உள்ளிட்ட சின்னங்களை அவரோ அவரது தரப்பினரோ பயன்படுத்தக் கூடாதும் என்றும், தன்னிச்சையாக நிர்வாகிகளை நியமனம் செய்ய கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது. அது இப்போது வரை நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில் செ. ஹைதர் அலியின் ஆதரவாளராகக் கூறப்படும் எம். ஹைதர் அலி, தமுமுக என்ற முன்னெழுத்துக்களை ‘ட்ரேட் மார்க்’ சட்டப்படி 2020ல் பதிவு செய்திருப்பதாகவும் அவரே தமுமுகவை சொசைட்டியாக 2015ல் பதிவு செய்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்தி வருகிறார். 25 ஆண்டுகால பயன்பாட்டு பாத்தியதை உள்ள ஓர் பேரமைப்பை, உண்மைகளை மறைத்து மோசடியாக ‘ட்ரேட் மார்க்’ல் பதிவு செய்வது சட்டப்படி செல்லாது. இதற்கு முன்மாதிரியாக பல தீர்ப்புகள் உள்ளன. 2015ல் திருநெல்வேலியில் சில நபர்களால் தமுமுக பெயரில் போலியாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது செயலிழந்து முடங்கிக் கிடக்கும் அறக்கட்டளையைப் பதிவு செய்தவர்கள் பட்டியலில் செ. ஹைதர் அலி, ம. ஹைதர் அலி ஆகியோரின் பெயர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமுமுகவின் பெயரை, நீக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, நடவடிக்கை எடுத்திடுமாறு காவல்துறை இயக்குநரிடமும், சென்னைப் பெருநகர ஆணையர் உள்ளிட்ட மாநிலம் முழுதும் உள்ள உயர் காவல் அதிகாரிகளிடமும் முன்பே புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 13.7.2021 அன்று தமுமுகவின் தலைமையகம் அமைந்துள்ள மண்ணடி வடமரைக்காயர் தெரு அருகே அங்கப்பன் தெருவில் ஒரு வாடகைக் கட்டடத்தில் தமுமுக மாநிலத் தலைமையகம் என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று மதியமே காவல் துறையில் தமுமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரவு வரை நடவடிக்கை இல்லை என்றதும் அப்பகுதி தொண்டர்கள் அந்தப் பதாகையை அகற்றியுள்ளனர். பதாகையை அகற்றுவதைத் தடுக்க எதிர்தரப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரு காவலர் உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது மிகவும் வேதனைக்குரிய நிகழ்வு. தீய உள்நோக்கத்தோடு தமுமுகவின் பெயரைப் பயன்படுத்தி குழப்பம் விளைவிப்பவர்களால் தமுமுக அலுவலகம் சூறையாடப்பட்டது என்று செய்தியைப் பரப்புவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இரண்டு மாதமாகவே, தமுமுகவினரைப் புண்படுத்தும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்திட காவல்துறை உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு, நீதிமன்ற உத்தரவை நிலைநாட்ட வேண்டும் எனக் கோருகிறேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!