
தீபாவளி முடிந்த பின் பட்டாசு வெடிக்க திரி கிள்ளுவதைப் போல டிசம்பர் 12-ம் தேதியன்று தனது பிறந்த நாள் ஆர்ப்பாட்டமாக முடிந்த பின் இப்போது ரசிகர்களை சந்திக்க முடிவெடுத்திருக்கிறார் ரஜினி.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு இதற்கு முன் இல்லாத வகையில் இந்த முறை வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ரஜினி பல காலமாக அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்க, சமீப சில மாதங்களுக்கு முன் அரசியல் பற்றி பேச துவங்கிய கமல் அடித்து நொறுக்கி இதோ இப்போது கட்சியே துவங்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் ரஜினியிடம் அரசியல் பிரவேச அறிவிப்பை அவரது ரசிகர்கள் வெகுவாய் எதிர்பார்த்தனர். இதற்கேறப ரஜினியும் சில பொது அமைப்புகளின் தலைவர்கள், சீனியர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அரசியல் பற்றி கலந்தாலோசித்தார்.
இந்நிலையில் அவர் 2.0 மற்றும் காலா படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்ட நிலையில் ரஜினியின் பிறந்த நாளான கடந்த 12-ம் தேதி அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் பெரிதும் நம்பினர். ஆனால் அமைதி காத்துவிட்டார் ரஜினி.
இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு இன்று ரஜினியின் நேர்முக உதவியாளர் வி.எம்.சுதாகர் மூலமாக ஒரு கடிதம் தரப்பட்டுள்ளது. அதில் வரும் 26-ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 3 வரை ரஜினி தனது தமிழக ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், சுமார் 1000 பேர் இதில் கலந்து கொள்வார்கள், இதற்கு உங்களது அனுமதியும் போலீஸ் பந்தோபஸ்தும் தேவை, தந்துதவுங்கள் என்று கோரப்பட்டுள்ளது.
இதற்காக ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் அதை செலுத்தவும் தாங்கள் தயார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக மறுபடியும் ஆட்டத்தை துவக்கியுள்ளார் ரஜினி. இது வெறும் போங்காக முடியுமா அல்லது அரசியல் வரை போய் நிற்குமா என கவனிப்போம்!