
தமிழகத்தில் நாளை முதல் பிறப்பிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை எனில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிப்பு 4000ஐ தாண்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கோயில் திருவிழாவுக்கு தடை, பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை, உணவகங்கள், கடைகளை இரவு 11 மணிக்குள் மூட வேண்டும், வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், நாளை முதல் விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கவனத்துடன் கடைப்பிடிக்காவிட்டால், கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் பலனளிக்காவிட்டால் பொது மக்கள் நலன் கருதி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.
மேலும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் அரசு வலியுறுத்தியுள்ளது.