எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நிறைவு... கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பறிமுதல்?

By vinoth kumarFirst Published Mar 26, 2021, 7:25 PM IST
Highlights

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான எ.வ.வேலு திமுக வேட்பாளராக திருவண்ணாமலையில் போட்டியிடுகிறார். எ.வ.வேலு தனது தொகுதியில் சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் நடத்தி வருகிறார். வேறு சில தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். திருவண்ணாமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.

இந்நிலையில், எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லம் என ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கினர். திருவண்ணாமலை மட்டுமல்லாமல் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீட்டிலும் நேற்று காலை 11 மணிமுதல் நடைபெற்ற சோதனை இன்று மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த சோதனையில்  3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வருமான வரிச்சோதனையால் திமுகவின் வெற்றி பாதிக்காது. தோல்வி பயம், அரசியல் உள்நோக்கத்துடன் வருமானவரி சோதனை நடத்துகிறார்கள். வருமானவரி சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

click me!