
நிலவேம்பு குடிநீர் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்.18ஆம் தேதி நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
இதற்குக் காரணம், டெங்கு குறித்த அச்சம் பொதுமக்களிடம் தீவிரமாகப் பரவியுள்ள சூழலில், சிலர் அரசியல் காரணங்களுக்காக, வேண்டுமென்றே டெங்கு குறித்த அச்சத்தை மக்களிடம் நிலைக்க வேண்டும் என்பதற்காக, டெங்கு தடுப்பு மருந்தாக, காலம் காலமாக தமிழகத்தில் கொடுத்து வரப்படும் நிலவேம்பு குறித்து வதந்திகளைப் பரப்பி, மக்களிடம் பீதி கிளப்பி வருவதுதான்.
முன்னதாக, தில்லியில் இருந்து மத்திய சுகாதாரக் குழு ஒன்று, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் டெங்கு பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இக் குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களுக்கு தமிழ் மருத்துவமும் பாரம்பரிய மூலிகைகள் குறித்த மருத்துவ முறைகளும் தெரியாதவை என்பதால், அவர்கள் கிளினிகல் அப்ரோச் எனும் வகையில், நிலவேம்புக்கு மருத்துவ ஆய்வு ரீதியான முடிவுகள் எதுவும் கிடையாது என்று கூறியிருந்தனர்.
ஆனால், இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு, நில வேம்பு குடிநீர் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் ஆட்சேபத்துக்குரிய வகையில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இது குறித்த புகார்கள் வந்த நிலையில், மாநில சுகாதாரத் துறை, வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவுகளில்...
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்....
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்... என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், தற்போதைய டெங்கு பரவலுக்கு நம் கையில் இருக்கும் ஒரே தீர்வாக இப்போது நிலவேம்புதான் திகழ்கிறது. எனவே இது குறித்து வதந்தி பரப்பும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
இவ்வாறு நடவடிக்கை எடுக்கும் அந்த ’தில்’...நெஞ்சில் இருந்தால்... கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுத்துப் பாருங்கள் என்று சமூக வலைத்தளங்களில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அறைகூவல் விட்டனர்.
இந்நிலையில், நிலவேம்பு குறித்து தவறான கருத்துக்களை பரப்புவதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் ஒன்று அளித்துள்ளார்.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.