
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த முறை பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாலை 5 மணிக்கு மேல் வீடு, வீடாக பிரசாரம் செய்யக்கூடாது, அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிரசாரத்திற்கு செல்ல வேண்டும், அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பையில் பணம் வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பணப்பட்டுவாடா செய்ததாக திமுகவினர் அவரை பிடித்து கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவினர் தான் பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதனால் அப்பகுதியில் போலீசாருக்கு உதவியாக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்ட பின்னரே பணம் வைத்திருந்தவர்கள் யார்? அவர்கள் பணப்பட்டுவாடா செய்தனரா? என்பன போன்ற தெளிவான விவரங்கள் தெரியவரும்.