
நிலக்கரி முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மது கோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 செப்டம்பரில் இருந்து 2008 ஆகஸ்ட் வரை மதுகோடா முதலமைச்சராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமை செயலர் ஏ.கே. பாசு, நிலக்கரித்துறை செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அதுதொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 13-தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முன்னாள் முதலமைச்சர் மதுகோடா, முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் ஹெச்.சி.குப்தா உள்பட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார்.
நான்கு பேர் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்களை விடுவிப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 16-ம்தேதி அறிவிக்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
சிறுவயதில் இரு மகள்களுக்கும், உடல்நலப் பிரச்சனை இருப்பதால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என மதுகோடா தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், நிலக்கரி முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 25 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய மதுகோடவுக்கு இரண்டு மாத காலம் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.