சாதிவாரி கணக்கெடுப்பே சமூக நீதிக்கான அளவுகோல்..!! சாதிப்பெருமை பேசுபவர்களுக்கு கி.வீரமணி சவுக்கடி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2020, 3:32 PM IST
Highlights

ஏடுகளில் மணமக்கள் தேவை! (Matrimonial Columns) விளம்பரங்களில் தனித்தனி சாதிக்கு ஏற்ப ‘‘மணமகன், மணமகள் வரன்கள் தேவை’’ என்று கூச்சநாச்சமின்றி சாதி பெயரில் திருமண நிலையங்கள் இயங்குகின்றனவே

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி வாரியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் கணக்கெடுப்பை நடத்த வேண்டும், அப்போதுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய சாதியினர் என்று பலரையும் கொண்ட  சமுதாயத்தில் அவரவர் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பங்கிட்டு வழங்க பயன் தரும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

“உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கு - வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, சென்சஸ் -2021 இல், இந்திய நாட்டு குடிமக்களின் சாதிவாரியாகவும், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்கள்தொகை எப்படி உள்ளது என்பதை அறிந்து இட ஒதுக்கீடுகள் அளிப்பதற்கு ஏற்ப அந்த மக்கள்தொகை புள்ளி விவரங்கள் பயனுள்ளதாக அமையக்கூடும் என்பதால், மத்திய அரசு வருகின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பில் அந்த முறையை அவசியம் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஆணையிட, அந்தப் பொதுநல வழக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மத்திய அரசின் உள்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அதன் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் உள்துறைக்கு இதுபற்றி பரிசீலிக்கலாம்; இது நல்ல யோசனை - கோரிக்கைதான் என்ற கருத்துக் கூறி, ‘‘நோட்டீஸ்’’ அனுப்ப ஆணையிட்டிருக்கிறது. இது ஒரு நல்ல செய்தியாகும். நாம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். நாட்டில் உள்ள பல்வேறு சமூக நீதி கோரும் பல சமூக அமைப்புகளும், சமூக விஞ்ஞான உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தவே செய்கின்றனர். உடனே ஒரு சிலர், குறிப்பாக வெகு சிறுபான்மையராகவும், ஆதிக்கவாதிகளாக கல்வி, உத்தியோக மண்டலங்களில் ஏகபோக ராஜ்ய பரிபாலனகர்த்தாக்களாகவும் உள்ளவர்கள் ஒரு பொய் அழுகை, போலிக் கூப்பாடு போடுவார்கள்.

நம்மில் புரியாத சிலரும் - நுனிப்புல்லர்களும் ‘கோரஸ்’ பாடுவார்கள்

‘அய்யோ, சாதி பற்றியா பேசுவது? சாதியை இதில் கேட்டால் சாதி உணர்வுக்கு இடம் அளிப்பது பிற்போக்குத்தனமல்லவா’ என்று ‘புஸ்வாணம்‘ விடுவார்கள் - அந்தப் பொல்லாங்கு மனிதர்கள். நம்மில் புரியாத சிலரும்கூட - நுனிப்புல்லர்கள் - ஆமாம்; ‘இந்தக் காலத்தில் சாதியைக் கேட்டுப் புதுப்பிக்க வேண்டுமா?’ என்று ‘கோரஸ்’ பாடுவார்கள். சாதி ஒழிந்துவிட்டது என்று இந்தியாவில் எங்காவது, எந்த சட்டத்திலாவது இருக்கிறதா?அவர்களுக்கு ஒரே ஒரு நேரடிக் கேள்வி நாட்டில் சாதி இருக்கிறதா? இல்லையா? நாட்டில் சாதி ஒழிந்துவிட்டதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘சாதி’ என்ற சொல் 18 இடங்களில் வருகிறதா? இல்லையா? சாதி ஒழிந்துவிட்டது என்று இந்தியாவில் எங்காவது, எந்தச் சட்டத்திலாவது இருக்கிறதா? இடம் பெற்றிருக்கிறதா? 12,000 ஆண்டுகளுக்கு முன் இந்திய கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்யவேண்டும் என்று முனையும் இந்திய மத்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகம் அமைத்த குழுவில், சாதி சங்க உலகத் தலைவரான - இருவரை பகிரங்க அங்கீகாரம் தந்து நியமித்துள்ளது.

யாருக்காவது ஆட்சேபனை உள்ளதா?

ஏடுகளில் மணமக்கள் தேவை! (Matrimonial Columns) விளம்பரங்களில் தனித்தனி சாதிக்கு ஏற்ப ‘‘மணமகன், மணமகள் வரன்கள் தேவை’’ என்று கூச்சநாச்சமின்றி சாதி பெயரில் திருமண நிலையங்கள் இயங்குகின்றனவே - அதுபற்றி யாருக்காவது ஆட்சேபனை உள்ளதா? இன்னமும் சாதிப் பட்டத்தை அது ஏதோ படித்து உழைத்துப் பெற்ற ‘பட்டம் போல்’ வெட்கமின்றி போட்டுத் திரிகிறார்களே, அவர்களை யாராவது தடுத்தது உண்டா? எனவே, இப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியாக சென்சஸ் நடத்தினால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய சாதியினர் என்று பலரையும் கொண்ட சமுதாயத்தில் அவரவர் மக்கள்தொகை எண்ணிக்கை, இட ஒதுக்கீடு உள்பட பலதுக்கும் பயன்படுமே.அடிக்கொருதரம் மாறும் பொருளாதாரக் கணக்கெடுப்பைவிட, ஒருமுறை பிறந்தால், என்ன செய்தாலும் சுடுகாட்டிலும்கூட மாற்றவே முடியாது என்ற நிலை உள்ள சாதியைக் கேட்டுக் குறிப்பதால் மட்டும்தான் சாதி நிலைத்துவிடுமா? ஏன் இந்த ‘‘நெருப்புக்கோழி’’ மனப்பான்மை?

காலத்தின் கட்டாயம், சமூக நீதிக்கான அளவுகோல்

எனவே உச்ச நீதிமன்றமே வரவேற்றுள்ள இந்தக் கருத்தினை மத்திய அரசு ஏற்கவேண்டியது நியாயம், காலத்தின் கட்டாயம். சமூக நீதிக்கான அளவுகோல் (Social Barometer) ஆகும். தாமதிக்காமல் இப்போதிருந்தே அதற்கான சமூக நீதி ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். நாட்டில் உள்ள அத்துனை கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றிட வேண்டும். தமிழக அரசே, இதில் முயலவும், முன்னிலையாகவும் இருப்பது அவசரம், அவசியம்”.என வலியுறுத்தியுள்ளார். 
 

click me!