தமிழகம் கைவிட்டுவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரம் என்னவாகும்?

By Asianet TamilFirst Published Jan 4, 2019, 3:35 PM IST
Highlights

தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைப்பதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசிய கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று.

தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைப்பதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசிய கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று. கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்ற உறுப்பினர் மட்டுமே அந்தக் கட்சிக்கு தற்போது உள்ளார். 

ஒரு தேசியக் கட்சி மூன்று மாநிலங்களில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அதன் அங்கீகாரத்தைத் தொடர்ந்து தக்க வைக்க முடியும். கேரளத்திலும் மேற்கு வங்காளத்திலும் ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி ஓரளவுக்கு வாக்குகளைப் பெற்றுவிடும். 

கடந்த காலங்களில் தமிழகத்தில் வலுவான கூட்டணியில் இடம்பிடித்து குறிப்பிட்ட வாக்குகளை அந்தக் கட்சி பெற்றுவந்தது. இதனால், தேசிய அங்கீகாரத்தை தொடர்ந்து தக்கவைத்து வந்தது இந்திய கம்யூனிஸ்ட். ஆனால், கடந்த நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலில் அது சாத்தியமில்லாமல் போனது. தற்போதைய நிலையில் கேரளா, மேற்கு வங்காளம் தாண்டி வேறொரு மாநிலத்திலும் கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. 

தமிழகம் மட்டுமே அதற்கு உதவ முடியும் என்று கம்யூனிஸ்ட் கருதுகிறது. தமிழகத்தில் கணிசமான வாக்குகளைப் பெற வேண்டும் என்றால், வலுவான கூட்டணியும் தேவை. அந்த வகையில்தான் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பிடித்துள்ளது.  ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் வழிமொழிந்த உடனே அதை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக குழு.  ‘அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்’ என்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் சேர்த்து இப்போதே கூட்டணியில் இடம் பிடித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அந்தக் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாழ்க்கைப் போராட்டத்துக்கு சமம்.

click me!