அ.தி.மு.க.வின் கோட்டையில் விழுது பெரும் ஓட்டை...! வெடித்துக் கிளம்பும் எதிர்ப்புகள், மூச்சு திணறும் முதல்வர்கள்..!!

By Vishnu PriyaFirst Published Jan 4, 2019, 3:05 PM IST
Highlights

தோள் கொடுக்கும் கோட்டையான கொங்கு வாக்கு வங்கியிலேயே இவ்வளவு பெரிய ஓட்டை விழுந்தால், எப்படி தப்பி பிழைப்பது? என்பதுதான் முதல்வர்கள் உள்ளிட்ட அமைச்சரவையின் பெரிய கேள்விக்குறியாகவும், வருத்தமாகவும் உள்ளது. 

யுத்தத்தில் பிரம்மாஸ்திரம் மிக மிக முக்கியமானது. எல்லாம் இழந்த நிலையில் கடைசி அஸ்திரமாக ஏவப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்து, வெற்றியை நிலைநாட்டிட உதவும் ஆயுதம் இது. 

அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரமாக இருந்தது ‘கொங்கு மண்டல தொகுதிகள்’தான். தெற்கு, வடக்கு, டெல்டா என மற்ற பகுதிகளில் பல இடங்களை இழந்திருந்தாலும் கூட, கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் கிடைத்த பெரும் வெற்றிதான் அந்த கட்சியை மீண்டும் அரியணையில் உட்கார வைத்தது மட்டுமில்லாமல், தொடர்ந்து அரசியல் ஆதிக்கம் செலுத்திடவும் வைத்துக் கொண்டிருந்தது. 

கொங்கு மண்டல மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கை நினைத்துத்தான் யாரையும் எதிர்க்கும் கெத்தும் அ.தி.மு.க.வுக்கு வந்தது. இந்நிலையில் அடிமடியிலேயே கை வைத்தது போல், கொங்கு மண்டலத்தின் கணிசமான மாவட்டங்களில் வெரைட்டி வெரைட்டியான பிரச்னைகளால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழ துவங்கியுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் எடுத்து வருவதற்காக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நடவடிக்கையால் தங்களின் விவசாய நிலத்தின் கணிம்சமான பகுதி பறிபோவதால் விவசாயிகள் கடும் போராட்டத்தில் குதித்தனர். தொடர் உண்ணாவிரதம், மண்ணள்ளி சபிக்கும் போராட்டம்...என்றெல்லாம் ஆரம்பித்து பல வகையான எதிர்ப்பு வடிவங்களை அரசுக்கு எதிராக நடத்திவிட்டனர். இந்நிலையில் இந்த போராட்ட அமைப்புகளின் தலைமை விவசாயிகளை அழைத்து அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துவிட்டது. ஏற்கனவே நிறுவப்பட்ட மின்கோபுரங்களுக்கு வாடகை தரவேண்டும், இனி கேபிள்தான் அமைக்க வேண்டும்! கோபுரம் கூடாது! என்பது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு தரப்பிலிருந்து வந்த பதிலில் அவர்களுக்கு ஒப்புதல் இல்லை. எனவே மீண்டும் துவங்குகிறது போராட்டம். 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இந்த போராட்டம் மறுபடியும் வெடிக்கும் நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு கைவிட வேண்டும், இதற்கு தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்! என்று கூறி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் தனி  போராட்டத்தை துவக்கியுள்ளனர். கர்நாடகத்துக்குள்ளேயே ஊர்வலமாக நுழைய முயலுமளவுக்கு தயாராகிவிட்ட அவர்கள், ‘இந்த அணை தடுப்பு யுத்தத்தில் ஆஹிரம் விவசாயிகளை பலி கொடுக்கவும் தயாராக உள்ளோம். எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவோ, அலட்சியம் காட்டவோ தமிழக அரசு முயன்றால் எங்களின் பதிலடி வெகு பயங்கரமாக இருக்கும்.’ என்று சவால்விட்டு சபித்துள்ளனர்.

 

இது இப்படியிருக்கும் நிலையில் சேலம் டூ சென்னை ஐந்து வழி பசுமைச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் இன்னமும் அணையாத நெருப்பாக கனன்று கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடித்து எழலாம் எனும் நிலை நிலவுவது யதார்த்தம். ஆக கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என கொங்கு மண்டலத்தை சேர்ந்த அத்தனை மாவட்டங்களிலுமே அரசுக்கு எதிரான போக்கு நிலவுகிறது. 

பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களோ பல்லாயிரம். அந்த வகையில் பல லட்சம் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக படைதிரட்டி நிற்கின்றனர். இந்த சூழல் நீடித்தால், தேர்தலில் இவர்களின் வாக்குகள் ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராய் போகும் நிலை உள்ளது. எப்போதும் தோள் கொடுக்கும் கோட்டையான கொங்கு வாக்கு வங்கியிலேயே இவ்வளவு பெரிய ஓட்டை விழுந்தால், எப்படி தப்பி பிழைப்பது? என்பதுதான் முதல்வர்கள் உள்ளிட்ட அமைச்சரவையின் பெரிய கேள்விக்குறியாகவும், வருத்தமாகவும் உள்ளது.  இந்த பிரச்னைகள் ஒவ்வொன்றிலும் முக்கிய லகான் மத்திய அரசின் கையில் உள்ளது. மக்களுக்காக போராடினால் டெல்லியை பகைக்க வேண்டும். எனவே எதையும் சரி செய்ய முடியாமல் திணறுகிறார்கள் பழனிசாமியும், பன்னீர்செல்வமும். என்னாகுமோ! ஏதாகுமோ!

click me!