சகோதரி கவுசல்யாவுக்கு இழைக்கப்படும் அநீதி... இது எந்த விதத்தில் ஞாயம்? கண்ணீர் வடிக்கும் வன்னி அரசு

By sathish kFirst Published Jan 4, 2019, 2:00 PM IST
Highlights

சாதி ஒழிப்புக்களத்தில் களமாடி வரும் சகோதரி கவுசல்யாவின் முதல் திருமணத்தில் சவாலாய் நின்றது சாதி. இப்போது மறுமணம் முடிந்து சவாலாய்நிற்பது ‘சதி’. அதுவும் கூட்டுச்சதி!
 

உடுமலையில் ஆணவக்கொலையால் பலியான சங்கரின் மனைவி கவுசல்யா சமீபத்தில் சக்தி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.  இதனால், கவுசல்யாவின் போக்கு சரியில்லை எனக்கூறி தங்கள் கிராமத்தில் நுழைய அவருக்கு தடை விதித்துள்ளதால் அவர் ஊரை விட்டு கிளம்பி இருக்கிறார். 

சக்தி மீது ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை குற்றச்சாட்டுகள் உள்ளது. அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன் எனவும் கூறப்படுகிறது. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்காமல் பல பெண்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் கவுசல்யாவோ இதெல்லாம் தமக்கு முன்பே தெரியும் என ஒப்புக் கொண்டுள்ளார்.

மறுமணம் செய்துகொண்ட கவுசல்யா மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விசிக வன்னி அரசு கவுசல்யாவிற்கு ஆதரவாக முகநூலில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், சாதி ஒழிப்புக்களத்தில் களமாடி வரும் சகோதரி கவுசல்யாவின் முதல் திருமணத்தில் சவாலாய் நின்றது சாதி. இப்போது மறுமணம் முடிந்து சவாலாய்நிற்பது ‘சதி’. அதுவும் கூட்டுச்சதி. இந்த சதியை சாதியவாதிகளும் கவுசல்யா மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு கொண்டவர்களும் பயன்படுத்தி வருவது தான் வேதனையிலும் வேதனை.

கவுசல்யாவின் போராட்டமும் துணிச்சலான முன்னெடுப்புகளும் சாதிய ஆதிக்கவாதிகளுக்கு பெரும் சவாலாய் ஆனது. சாதி ஒழிப்பு தொடர்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லும் போது, “அகமண முறையை ஒழித்து புறமண முறையை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு மன ரீதியாக சாதி இந்துக்களிடம் மாற்றம் வரவேண்டும்” என்றார். அந்த மாற்றங்களோடு தான் உண்மையாக சகோதரி கவுசல்யா களமாடி வருகிறார். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால், சக்தி மீதான விமர்சனங்கள் அத்தனையும் அவரே ஒப்புக்கொண்டுள்ளார். விவாதிக்கவும் பட்டுள்ளது. இந்த நிலையில் சக்தி மீதான அத்தனை குற்றச்சாட்டுக்களுக்கும் கவுசல்யாவையே பொறுப்பேற்க செய்வது என்பது திட்டமிட்ட சதி செயலாகவே அமைகிறது. சக்தியின் முந்தைய செயல்பாடுகளுக்கு கவுசல்யாவை போறுப்பேற்க சொல்லுவது எந்த விதத்தில் ஞாயம்?
பொது வாழ்க்கையில் களமாடும் ஒரு பெண்ணை நொறுங்கிப்போகுமளவுக்கு அவதூறுகளை பரப்புவது 
சாதியவாதிகளுக்குத்தான்
துனைபோகும்.

ஒரு அறையில் பேசப்பட்ட அல்லது முடித்து வைக்கப்பட்ட ‘பஞ்சாயத்து’
பொது வெளியில் அவதூறாக மாற்றப்படுவது என்பது அந்த பெண்ணுக்கு மட்டும் இழைக்கப்படுகிற அநீதி அல்ல, அவரைப்போன்று போராட வருபவர்களுக்கான அநீதியும் தான்.

அபராதம் போடுவது, பொது வாழ்க்கைக்கு தடை விதிப்பது என்பதெல்லாம் ஆதிக்க சிந்தனையில்லாமல் வேறு என்ன? இந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது?  என இவ்வாறு வன்னி அரசு தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

click me!