
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதில் நீண்ட நாள் இழுப்பறிக்கு பிறகு கடந்த முறை களம் இறங்க தயாரான மதுசூதனனையே அதிமுக வேட்பாளராக களமிறக்கியுள்ளார் எடப்பாடி.
டிடிவி அணி சார்பில் வேட்பாளராக அவரே களம் காண்கிறார். தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், டிச., 1ல், பகல், 12 மணிக்கு, வேட்புமனு தாக்கல் செய்கிறார். அன்றைய தினம், தொகுதி மக்களை சந்தித்து, ஓட்டு சேகரிக்கும் நிகழ்ச்சியை துவக்குகிறார்.
தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், டிச., 10 முதல், வார்டு வார்டாகவும், வீதி வீதியாகவும், மருதுகணேசை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்கிறார்.
ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில்லை என அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டார்.
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.