
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக உழைத்தால் உயர்நிலைக்கு வரமுடியும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சிவன் கடந்த வாரம் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழக மக்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
சிவன் பதவியேற்றுக் கொண்ட பின்னர் முதன் முறையாக நேற்று தமிழகம் வந்தார்.திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிவன் கலந்துகொண்டார்.
அப்போது இஸ்ரோ ஆண்ட்ரிக்ஸ் சார்பில் காவல்கிணறு ஊர்மக்களுக்கு 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியைத் தொடக்கி வைத்தார்.
காவல்கிணறு பணகுடி, திருக்குறுங்குடி, திருவேங்கடநாதபுரம் ஆகிய ஊர்களின் அரசு பள்ளிகளுக்குக் கணினிகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து பேசிய சிவன், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக உழைத்தால் உயர்நிலைக்கு வரலாம் என்றும், அதற்குத் தானே எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு பயன்படும் வகையில் புதிய நேவியேஷன் கருவியை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளதாகவும், அது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்த சிவன் அந்த கருவியை வைத்து எல்லைதாண்டிச் செல்லாமல் மீன் பிடிக்க முடியும் என்றும் கூறினார்